Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வந்தே பாரத் மட்டும் வருகிறது... மற்ற ரயில்கள் அறிவிப்போடு சரி!

வந்தே பாரத் மட்டும் வருகிறது... மற்ற ரயில்கள் அறிவிப்போடு சரி!

வந்தே பாரத் மட்டும் வருகிறது... மற்ற ரயில்கள் அறிவிப்போடு சரி!

வந்தே பாரத் மட்டும் வருகிறது... மற்ற ரயில்கள் அறிவிப்போடு சரி!

UPDATED : ஜூன் 19, 2024 05:59 AMADDED : ஜூன் 19, 2024 12:27 AM


Google News
Latest Tamil News
ரயில்வே சார்பில் அறிவிக்கப்படும் புதிய ரயில்களில், வந்தே பாரத் ரயில் தவிர, மற்ற ரயில்கள் வெறும் அறிவிப்புடன் நிற்பதாக, அதிருப்தி எழுந்துள்ளது.

விமான நிலைய விரிவாக்கம், பசுமை வழிச்சாலைகள், எல் அண்ட் டி பை பாஸ் விரிவாக்கம், கோவை சந்திப்பு மேம்பாடு மற்றும் தொழில் துறையின் பலவித கோரிக்கைகளுடன், கோவைக்கான ரயில் தேவைகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாகவுள்ளன. மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, அரசு பெருமளவில் நிதி ஒதுக்க வேண்டும்; நிலமெடுப்பு, சட்டரீதியான பல விதமான சவால்களைக் கடந்து, திட்டங்களை நிறைவேற்ற வேண்டியிருக்கும்.

ஆனால் கோவை மக்களுக்கு, மிக அத்தியாவசியமாகத் தேவைப்படும் புதிய ரயில்களுக்கு, ரயில்வே துறை முடிவெடுத்து, உடனே இயக்குவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. கோவையிலிருந்து சென்னைக்கு குறிப்பாக, எழும்பூருக்கு இயக்கப்படும் வகையில், கூடுதலாக ஒரு இரவு நேர ரயில் வேண்டுமென்பது, சமீபகாலமாக வலுப்பெற்று வரும் முக்கியக் கோரிக்கையாகும்.

பெங்களூருவுக்கு இரவு ரயில்


அதேபோல, பெங்களூருக்கும் கூடுதலாக ஒரு இரவு நேர ரயில் வேண்டுமென்று, இங்குள்ள தொழில் அமைப்புகள், ரயில்வே அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளிடம், பலமுறை மனு கொடுத்து விட்டனர்.

இவ்விரு கோரிக்கைகளுடன், மேட்டுப்பாளையம்- திருச்செந்துார் இடையே, 'வெற்றிவேல் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில், புதிய ரயில் இயக்க வேண்டுமென்று, பா.ஜ.,வைச் சேர்ந்த கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும், தேசிய மகளிரணி செயலாளருமான வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கைகள் எதுவுமே ஏற்கப்படவில்லை.

மாறாக, கோவை-சென்னை மற்றும் கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்கள் அறிவிக்கப்பட்டு, உடனடியாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களும் கோவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், ஏழை மற்றும் நடுத்தட்டு மக்கள் இதில் பயணிக்க இயலாததால், சாதாரண கட்டணமுள்ள ரயில்களை இயக்க வேண்டுமென்பதே, பெரும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

ரயில்வேயின் பாரபட்சம்


அதேபோல, கோவையிலிருந்து கேட்கப்பட்ட திருச்செந்துார் ரயிலும், இப்போது பாலக்காட்டிலிருந்து இயக்கப்படுவது, தெற்கு ரயில்வே அதிகாரிகளின் பாரபட்சத்தை வெளிப்படுத்தியுள்ளது. அந்த ரயிலுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லாத நிலையில், அந்த ரயிலை இனியாவது கோவைக்கு அல்லது மேட்டுப்பாளையத்திலிருந்து இயக்க வேண்டுமென்ற வாதமும் எழுந்துள்ளது.

இவை ஒரு புறமிருக்க, கோவை மாவட்டத்தில் வசிக்கும் பல லட்சம் தென் மாவட்ட மக்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான, துாத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் கோரிக்கை ஏற்கப்பட்டு, லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. வாரம் மூன்று முறை இந்த ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், பல லட்சம் மக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

அத்துடன், கோவை- மேட்டுப்பாளையம் இடையிலான மெமு ரயில், தினமும் ஐந்து முறை இயக்கப்படுவதில், காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளைகளுக்கு, போத்தனுார் வரையும் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அறிவித்த சில நாட்களில், தேர்தல் அறிவிப்பு வந்து விட்டதால், இரண்டுமே நடைமுறைக்கு வரவில்லை.

புதிய அரசு பொறுப்பேற்று, இரண்டு வாரங்களாகியும் இன்னும் இந்த ரயில்கள் இயக்கப்படவில்லை. அதே நேரத்தில், மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயிலைத் துவக்கி வைக்க பிரதமர் மோடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன், இந்த ரயில்களை இயக்க வேண்டுமென்று, கோவை மற்றும் துாத்துக்குடி என இரண்டு நகரங்களில் உள்ள பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.

நிறைவேற்ற வேண்டும்!'

தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நல சங்கம் மற்றும் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினருமான பிரம்மநாயகம் கூறுகையில், ''மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயில் இயக்கத்தை வரவேற்கிறோம்; அதே நேரத்தில், அதைத் துவக்கும் முன், தேர்தலுக்கு முன் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி- -- மேட்டுப்பாளையம் வாரமிரு ரயிலையும், திருநெல்வேலி - -பாலக்காடு பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீடிப்பு, ஆகிய இந்த இரண்டு கோரிக்கைகளையும் விரைவாக நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.



-நமது நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us