/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கனிமவள கொள்ளையை தடுக்காத அதிகாரிகள்! சேதமடையும் கிராமப்புற ரோடுகள் கனிமவள கொள்ளையை தடுக்காத அதிகாரிகள்! சேதமடையும் கிராமப்புற ரோடுகள்
கனிமவள கொள்ளையை தடுக்காத அதிகாரிகள்! சேதமடையும் கிராமப்புற ரோடுகள்
கனிமவள கொள்ளையை தடுக்காத அதிகாரிகள்! சேதமடையும் கிராமப்புற ரோடுகள்
கனிமவள கொள்ளையை தடுக்காத அதிகாரிகள்! சேதமடையும் கிராமப்புற ரோடுகள்
ADDED : ஜூலை 13, 2024 08:47 AM

கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில், 40க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்குகின்றன. இந்த குவாரிகளில் இருந்து கனிமவள கற்கள் எடுத்து செல்லும் லாரி களால் மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
கிராமப்புறங்களில் உள்ள குவாரியில் இருந்து கனிமவள கற்கள் எடுக்க, 6 வீல் கொண்ட கனரக லாரிகளை பயன்படுத்தி, 10 டன் அளவு வரை கற்கள் எடுத்து செல்லப்பட்டது.
கடந்த சில மாதங்களாக, 10 முதல் 16 வீல் கொண்ட டிப்பர் லாரிகள் கிராமப்புற ரோட்டில் சென்று வருவதால், ரோடு கடுமையாக சேதம் அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் பலர் ரோட்டில் செல்லும் போது பாதிக்கப்படுகின்றனர். மேலும், டிப்பர் லாரிகளில் 10 டன்னுக்கு பதில், விதிமுறை மீறி, 15 டன் அளவு கற்கள் ஏற்றி செல்கின்றனர். இதனால் ரோட்டில் அதிக சேதம் ஏற்படுகிறது. ஐந்தாண்டுகள் தாங்கும் கிராமப்புற ரோடுகள், தற்போது ஒரே ஆண்டில் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:
டிப்பர் லாரிகளில் அதிக அளவு கற்கள் ஏற்றி செல்வது குறித்து, பல முறை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் பயனில்லை. அதிக அளவு கற்கள் எடுத்து செல்லும் டிப்பர் லாரிகளை, பொதுமக்கள் தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கின்றனர்.
அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் தாமதமாக வருகின்றனர். சில சமயங்களில் அதிகாரிகள் வருவதே கிடையாது. இது போன்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுகின்றனர்.
இதனால், கிராமப்புற ரோடுகள் பெரும்பாலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதில், வாகனங்களில் செல்லும் போது, தடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதிக பாரம் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகளை கண்காணிக்க வேண்டும். ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.