Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாநகராட்சியில் மேயர் 'தலை' இல்லை! ஆனாலும் கூடுகிறது மாமன்றம்

கோவை மாநகராட்சியில் மேயர் 'தலை' இல்லை! ஆனாலும் கூடுகிறது மாமன்றம்

கோவை மாநகராட்சியில் மேயர் 'தலை' இல்லை! ஆனாலும் கூடுகிறது மாமன்றம்

கோவை மாநகராட்சியில் மேயர் 'தலை' இல்லை! ஆனாலும் கூடுகிறது மாமன்றம்

UPDATED : ஜூலை 22, 2024 03:17 AMADDED : ஜூலை 22, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
கோவை:கோவைக்கு புதிய மேயர் நியமிக்க, தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டிருக்கிறது. அதேநேரம், வளர்ச்சி பணிகள் தடைபடாமல் இருக்க, மேயர் இல்லாமல், வரும், 29ல் மாமன்ற கூட்டம் நடத்த, மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா, தனது பதவியை கடந்த 3ம் தேதி ராஜினாமா செய்தார். துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமையில், 8ம் தேதி மாமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடத்தி பதிவு செய்து, கலெக்டர் மூலமாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு அன்றைய தினமே அறிக்கை அனுப்பப்பட்டது.

ஏறக்குறைய 20 நாட்களாகியும், புதிய மேயரை தேர்ந்தெடுக்க, தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மாநகராட்சி சார்பில் எந்தவொரு பணிகள் மேற்கொள்வதாக இருந்தாலும், மாமன்றத்தில் அனுமதி பெற்று, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அவசர பணியாக இருப்பின், கமிஷனர் அல்லது மேயரிடம் முன்அனுமதி பெற்று செய்ய வேண்டும். அதன்பின், பின்னேற்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

லோக்சபா தேர்தல் சமயத்தில், ஏராளமான பணிகள் முன்அனுமதி பெற்று செய்யப்பட்டன. அவற்றுக்கு மாமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவை தவிர, புதிய பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

வழக்கமாக, மாதம் ஒருமுறை மாமன்ற கூட்டம் நடத்தப்படும். தேர்தலுக்கு முன், மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டம் நடத்தப்பட்டது. மூன்று மாதங்கள் கடந்து விட்டன.

கடந்த மாத இறுதியில், கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது; நிர்வாகக் காரணங்களால் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின், மேயர் ராஜினாமா செய்ததால், புதிய மேயரை தேர்ந்தெடுக்க, மாநகராட்சி நிர்வாகம் காத்திருந்தது.

அரசு தரப்பில் அறிவிப்பு வராததால், மேயர் இல்லாமலேயே, துணை மேயர் முன்னிலையில், 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாமன்ற கூட்டம் நடத்த, மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. தீர்மானப் பொருட்கள் தயார் செய்யும் பணியில், மாமன்றப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

கூட்டம் நடத்த இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால், இடைப்பட்ட நாட்களுக்குள் புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டால், அதற்கான ஏற்பாடுகளை செய்யவும் அதிகாரிகள் தயாராக இருக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us