Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேளாண் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பம்! மத்திய பட்ஜெட்டில் சிறப்பு அம்சம் மக்கள், தொழில்துறையினர் வரவேற்பு

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பம்! மத்திய பட்ஜெட்டில் சிறப்பு அம்சம் மக்கள், தொழில்துறையினர் வரவேற்பு

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பம்! மத்திய பட்ஜெட்டில் சிறப்பு அம்சம் மக்கள், தொழில்துறையினர் வரவேற்பு

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பம்! மத்திய பட்ஜெட்டில் சிறப்பு அம்சம் மக்கள், தொழில்துறையினர் வரவேற்பு

UPDATED : ஜூலை 24, 2024 05:40 AMADDED : ஜூலை 24, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
மத்திய அரசின் பட்ஜெட்டை, நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் நேரடியாக பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் ஒளிபரப்பபட்டது. அதில், தொழில்வர்த்தக சபை நிர்வாகிகள், ஆடிட்டர்ஸ், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.

மீடியம் பட்ஜெட்


வெங்கடேஷ், தலைவர், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை: சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், கடன் வரம்பு, 100 கோடி ஆக அதிகரித்துள்ளது. முத்ரா திட்டத்தில் கடன் வழங்கும் தொகையும் அதிகரித்துள்ளது.

தங்கம், வெள்ளி மற்றும் மொபைல்போன் உதிரிபாகங்கள், சார்ஜர்கள் மீதான சுங்க வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால், அவற்றின் விலை குறையும். இணைய வர்த்தகத்திற்கான டி.டி.எஸ்., குறைக்கப்படும்.

புதிய நடைமுறையில் கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு நிலையான கழிவு, 50 ஆயிரத்தில் இருந்து, 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு எதிர்பார்த்த சலுகைகள் வரவில்லை. இது மீடியமான பட்ஜெட்டாக உள்ளது.

புதிய திட்டங்கள்


கவுதமன், தலைவர், தேசிய தென்னை நார் கூட்டமைப்பு: முத்ரா கடன், 10 லட்சம் ரூபாயில் இருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது வரவேற்கதக்கது. இந்த பட்ஜெட் வேளாண், சிறு, குறு நிறுவனங்களின் உற்பத்தி, திறன் மேம்பாடு, கிராமப்புற வளர்ச்சி அனைத்தையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக உள்ளது.

வேளாண் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கியதோடு மட்டுமல்லாமல், விவசாயத்தை புதிய கண்ணோட்டமாக அரசு அணுகி உள்ளது. தொழில்நுட்ப வேளாண்மையை பயன்படுத்தி காய்கறி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்த புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஏமாற்றமும் இருக்கு!


சுதாகர், முன்னாள் தலைவர், கோவை மாவட்ட தென்னை நார் மற்றும் சார்பு பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம்: முத்ரா கடன் உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. உற்பத்தி துறை நிறுவனங்களுக்கு, 100 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. சிரமத்தில் உள்ள எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு கடன் உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்கதக்கது. தமிழகத்துக்கு உட்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எதிர்பார்த்த பல திட்டங்கள், தேவைக்கேற்ப நிதி ஒதுக்கீடு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழகத்துக்கு பாரபட்சம்


-அருண்பிரசாத், தனியார் நிறுவன பணியாளர், கிணத்துக்கடவு: புற்றுநோய்க்கு பயன்படுத்தும் மூன்று மருந்துகளுக்கான இறக்குமதி வரி ரத்து செய்துள்ளது வரவேற்கும் வகையில் உள்ளது. மாத சம்பளம் பெறும் வெகுஜன பணியாளர்களுக்கு பட்ஜெட்டில் எந்த வித அறிவிப்பும், திட்டங்களும் இல்லை.

ஆந்திராவுக்கு, 15 ஆயிரம் கோடியில் புது தலைநகரம் உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு பெரிதாக எந்த சலுகையும் இல்லை. நடுத்தர குடும்பத்தினர், ஷேர் மார்க்கெட்டில் நீண்ட கால பங்குகளை விற்கும் போது, 10 சதவீதம் இருந்த வரி, தற்போது 12.5 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், குறுகிய கால பங்குகளுக்கு, 20 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், 'மிடில் கிளாஸ்' மக்கள் 'ஷேர் மார்க்கெட்டில்' முதலீடு செய்வது குறைய வாய்ப்புள்ளது.

சிறப்பான பட்ஜெட்


சரவணன், மாநில செயற்க்குழு உறுப்பினர், தமிழக வணிகர் சம்மேளனம், வால்பாறை: மத்திய அரசின் இந்த பட்ஜெட்டில், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பிரதமரின் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பட்ஜெட்டில் ஆன்மிக சுற்றுலா மேம்பாட்டில் மத்திய அரசு அக்கறை காட்டியுள்ளது வரவேற்கதக்கது.

தங்கம் மற்றும் மருந்து மாத்திரைகளின் விலை குறைப்பு வரவேற்கதக்கது. நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்களின் கல்விக்கடனுக்கான வட்டி ரத்து செய்யப்படும். மாணவர்களை ஊக்குவிக்க உயர்க்கல்வி பயில, ரூ.10 லட்சம் வரை கடனுதவி அளிக்கப்படும் என்ற அறிவிப்புகளும், வேலைவாய்ப்பு பெருக்கவும், தொழில் துவங்க கடனுதவி வழங்கும் திட்டங்களும் வரவேற்க கூடியவை.

கிராமப்புற மேம்பாடு


மவுன குருசாமி, சேர்மன், குடிமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்: மத்திய பட்ஜெட் இயற்கை விவசாயம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தொழில் ஊக்குவிப்பு, கல்வி, வேலை வாய்ப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு, வேளாண் துறையில் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில் நுட்பம், கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், 110 பயிர் ரகங்கள் அறிமுகம், ஆராய்ச்சி நிலையங்கள், பாசன மேம்பாடு, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பாடு, என, விவசாயம், ஊரக மேம்பாடு, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பை உருவாக்குதல் என சிறப்பான பட்ஜெட்டாக உள்ளது.

இளைஞர்களுக்கு சாதகம்


செந்தில்குமார், வணிகவியல் துறை பேராசிரியர், உடுமலை: மத்திய பட்ஜெட் இளைஞர்களுக்கு சாதகமானதாக உள்ளது. திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அதிகரித்திருப்பதும், அதற்கான ஊக்கத்தொகை வழங்குவதும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும். இதனால் வறுமை நிலை மாறும் சூழல் ஏற்படும்.

மேலும், தனித்திறன் பயிற்சி மையமும் இளைஞர்களுக்கு அமைக்கப்பட உள்ளது. இதனால் ஒவ்வொருவரும் தனித்திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் பின்னடைவுக்கு செல்லும் நிலை மாறும். தங்களுக்கு பிடித்த துறைகளில் சாதிக்க முடியும்.

இயற்கை விவசாயம்


ஜெயக்குமார், தனியார் கல்லுாரி முதல்வர், உடுமலை: இந்த பட்ஜெட் நடுத்தரமானதாக உள்ளது. வரிவிலக்கு வரம்பை அதிகரித்திருக்கலாம். மேலும், வரிசெலவினங்களின் வரம்பும் ஒரு லட்சம் வரை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், சுயதொழில் செய்வதற்கான கடனுதவி அதிகரிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. மேலும், கிராமப்புற மேம்பாட்டையும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பட்ஜெட் உள்ளது.

நடுத்தரமான பட்ஜெட்


மகாலட்சுமி, தனியார் கல்லுாரி வணிகவியல் பேராசிரியர், உடுமலை: இந்த பட்ஜெட் ஏமாற்றம் இல்லாமல் நடுத்தரமானதாக உள்ளது. வரி விதிப்பு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் வரிசெலுத்த முன் வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அதேபோல் ஏற்கனவே செலுத்துவோரும் முழுமையாக வரிகட்டுவதற்கு முன்வருவார்கள். இளைஞர்கள் திறன்களை பயன்படுத்தி, தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

சிறப்பான திட்டம்


முருகேசன், ஆடிட்டர், உடுமலை: பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன்மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது மக்களுக்கு பயனளிக்கும். வேளாண் உற்பத்தி அதிகரிப்பு, வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு, முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது அதிக பயனளிக்கும்.

தொழிற்பயிற்சி பெறும், ஒரு கோடி இளைஞர்களுக்கு பழகுநர் ஊக்கத்தொகை மாதந்தோறும், 5 ஆயிரம் வழங்கப்படுவது வரவேற்கத்தக்க திட்டமாகும்.

- நிருபர் குழு -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us