/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ராஜினாமா கடிதம் கொடுத்த மேயர்கள்? அதிரடிக்கு தயாரான அறிவாலயம் ராஜினாமா கடிதம் கொடுத்த மேயர்கள்? அதிரடிக்கு தயாரான அறிவாலயம்
ராஜினாமா கடிதம் கொடுத்த மேயர்கள்? அதிரடிக்கு தயாரான அறிவாலயம்
ராஜினாமா கடிதம் கொடுத்த மேயர்கள்? அதிரடிக்கு தயாரான அறிவாலயம்
ராஜினாமா கடிதம் கொடுத்த மேயர்கள்? அதிரடிக்கு தயாரான அறிவாலயம்
ADDED : ஜூலை 03, 2024 03:53 AM

திருநெல்வேலி மாநகராட்சி தி.மு.க, மேயர் சரவணன் மீது, பல்வேறு புகார்களை, ஆளுங்கட்சியின் கவுன்சிலர்கள், கட்சி தலைமைக்கு தெரிவித்தனர். ஏற்கனவே, சரவணன் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர, 35க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு, மாநகராட்சி கமிஷனரிடம் வழங்கினர். நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீது, கடந்த ஜனவரியில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் என, மாநகராட்சி கமிஷனர் அறிவித்திருந்தார். ஆனால், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன், நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் நேருவும், திருநெல்வேலி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசுவும் இணைந்து, கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கவுன்சிலர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து, அவர்கள் நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீதான ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் தீர்மானம் தோல்வி அடைந்தது.
அதன்பின் நடந்த மாநகராட்சி கூட்டங்களில், தொடர்ந்து மேயர் சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் மோதல் போக்கு நீடித்தது. சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்திற்கு, 10 கவுன்சிலர்கள்தான் வந்தனர். பெரும்பான்மையின்றி கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை அறிவாலயத்துக்கு வரவழைக்கப்பட்ட மேயர் சரவணனிடம், கட்சித் தலைமை ராஜினாமா கடிதம் பெற்றுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
இதேபோல, கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பணிகளில், தி.மு.க., தலைமை எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றவில்லை என்பதோடு, அவர் மீது வைக்கப்படும் தொடர் குற்றச்சாட்டுக்களை அடுத்து, அவரிடம் இருந்தும் கட்சித் தலைமை ராஜினாமா கடிதம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
கோவை மேயராக கல்பனா பொறுப்பேற்றதில் இருந்து, மாநகராட்சி கமிஷனர்களாக இருந்த ராஜகோபால் சுங்கரா, பிரதாப் உள்பட அனைத்து அதிகாரிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்தார். அதேபோல, மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடனும் மோதினார்.
இது தொடர்பாக, அமைச்சர் நேருவிடம் புகார் பட்டியல் வாசிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் மீது கட்சித் தலைமை கடும் அதிருப்தியில் இருந்தது. இந்நிலையில், சமீபத்திய லோக்சபா தேர்தலில் மேயர் கல்பனாவின் 19வது வார்டில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அதிக ஓட்டுகளைப் பெற்றிருந்தது, கட்சித் தலைமைக்கு கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால் தனது பதவி பறிக்கப்படலாம் என யூகித்த கல்பனா, கேரள ஜோதிடர்கள் வாயிலாக பரிகார பூஜைகளை நடத்தினார். ஆனாலும், கட்சித் தலைமை கல்பனாவை வற்புறுத்தி ராஜினாமா கடிதம் பெற்று விட்டதாக கூறுகின்றனர்.
நெல்லை, கோவையைப் போலவே காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, தகுதி நீக்கம் செய்து, புதிய மேயரை தேர்ந்தெடுக்க வேண்டும் என, மாநகராட்சி கமிஷனரிடம் கவுன்சிலர்கள் மனு அளித்துள்ளனர். மேயரின் கணவர் யுவராஜின் ஆதிக்கம் மாநகராட்சி முழுவதுமாக இருப்பதாகவும், ஒரு சில கவுன்சிலர்கள் மட்டும் பயன் பெற்று வருவதாகவும் தி.மு.க., கவுன்சிலர்களே குற்றம்சாட்டியுள்ளனர்.
இளைஞரணி நிர்வாகியாக யுவராஜா இருப்பதோடு, அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கமானவராகவும் இருப்பதால், மேயர் மகாலட்சுமி மீது கவுன்சிலர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. பிரச்னை பெரிதாகவே மகாலட்சுமியையும் மாற்றிவிட கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் முடிந்த பின், மாநகராட்சி நிர்வாகப் பொறுப்பில் இருந்து குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருப்போர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க தி.மு.க., தலைமை முடிவெடுத்துள்ளது.
- நமது நிருபர் -