Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/* மருதமலை சாலை விரிவாக்கம் * இழுபறி... நிலமெடுக்க நிதி ஒதுக்குவதில் கேள்விக்குறி!

* மருதமலை சாலை விரிவாக்கம் * இழுபறி... நிலமெடுக்க நிதி ஒதுக்குவதில் கேள்விக்குறி!

* மருதமலை சாலை விரிவாக்கம் * இழுபறி... நிலமெடுக்க நிதி ஒதுக்குவதில் கேள்விக்குறி!

* மருதமலை சாலை விரிவாக்கம் * இழுபறி... நிலமெடுக்க நிதி ஒதுக்குவதில் கேள்விக்குறி!

ADDED : ஜூலை 30, 2024 10:54 PM


Google News
பல லட்சம் பக்தர்கள் வந்து செல்லும் மருதமலை கோவிலுக்குப் போகும் ரோட்டை விரிவாக்கம் செய்வதற்குத் தேவையான நிலமெடுப்பதற்கு, நிதி ஒதுக்காமல் தமிழக அரசு தாமதித்து வருகிறது.

கோவை அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலை சுப்பிரமணியர் கோவில், தமிழ்க்கடவுள் முருகனின் ஏழாம்படை வீடாகக் கருதப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. பக்தர்கள் வரும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

இதே ரோட்டில்தான், வேளாண் பல்கலை, பாரதியார் பல்கலை, அண்ணா பல்கலை கோவை வளாகம், சட்டக்கல்லுாரி, டைசல் பார்க் ஆகியவை அமைந்துள்ளன. இப்போது இதே வளாகத்தில்தான், தமிழக அரசின் 'டெக் சிட்டி' அமைக்கவும் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் லாலி ரோடு சந்திப்பில் துவங்கி, மருதமலை வரையிலும் இந்த ரோடு மிகவும் குறுகலாகவுள்ளது.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. லாலி ரோடு சந்திப்பில் பாலம் கட்ட வேண்டும்; குறைந்தபட்சம் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, இந்த அரசு கண்டு கொள்ளவேயில்லை. பி.என்.புதுார் பகுதியிலிருந்து மருதமலை வரையிலும், ஓரளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது; அந்தப் பகுதியிலுமே, வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது.

குறிப்பாக, வடவள்ளி காளிதாஸ் தியேட்டர் பகுதியிலிருந்து, பாரதியார் பல்கலை வரையிலான 2.7 கி.மீ., துாரமுள்ள ரோடு, மிகக் குறுகலாக, இரு வழிச்சாலையாகவுள்ளது. அதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாவதுடன், விபத்தும் அதிகம் நடக்கிறது. இந்த ரோட்டை நான்கு வழிச்சாலையாக்க, அ.தி.மு.க., ஆட்சியில் திட்டமிடப்பட்டது.

பத்து மீட்டர் அகலத்திலுள்ள இந்த ரோட்டை 22 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தத் திட்டமிடப்பட்டு, இரு புறங்களிலும் சேர்த்து 3.01 ஏக்கர் நிலமெடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் நிறைய கட்டடங்களை இடிக்க வேண்டியிருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மக்கள் எதிர்ப்பால், நிலமெடுக்கும் பணி நிறுத்தப்பட்டது.

ஆட்சி மாறிய பின், ரோட்டின் அகலத்தை 22 மீட்டரிலிருந்து 18.6 மீட்டராகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதில் கையகப்படுத்த வேண்டிய நிலத்தின் பரப்பு, 1.3 ஏக்கராகக் குறைந்தது. கடந்த 2021 ஜூலையில் புதிய நில ஆர்ஜித பிரேரணை தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால் முழுதாக மூன்றாண்டுகள் முடிந்தும் நிலமெடுப்புப் பணியே நடக்கவில்லை.

நெடுஞ்சாலைத்துறைப் பணிகளுக்காக நிலமெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டால், ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் சொல்கின்றனர். இவர்கள் ஏற்படுத்தும் தாமததத்தால், நில மதிப்பு உயர்ந்து கொண்டேயிருக்கிறது. நிலமெடுப்புக்காக, ரூ.9.8 கோடி ஒதுக்கப்பட்டது.

அதன்பின்னும் நிலமெடுக்காததால் நில மதிப்பு உயர்ந்து, இப்போது 13 கோடியே 88 லட்ச ரூபாய் தேவையென்று, திருத்தப்பட்ட நிர்வாக ஒப்புதல் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதலும் தரப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டாலும், இன்று வரை நிதி வந்தபாடில்லை.

மருதமலை கோவிலுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் காணிக்கை, நன்கொடை வருகிறது. சமீபத்தில் கோவிலின் மலைப்பாதை சிறப்பாக சீரமைக்கப்பட்டுள்ளது; மற்ற பணிகளும் நன்றாக நடந்துள்ளன. ஆனால் கோவிலுக்கு வரும் ரோடு, மிகவும் குறுகலாக இருப்பதால், பக்தர்கள் பல வித சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்; அப்பகுதியிலுள்ள குடியிருப்புவாசிகளும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுபற்றி மாநில நெடுஞ்சாலைத்துறை கோவை கண்காணிப்புப் பொறியாளர் ரமேஷிடம் கேட்டபோது, ''நிலமெடுப்புக்கு திருத்தப்பட்ட நிர்வாக ஒப்புதலுக்கு அரசு அனுமதித்து விட்டது. விரைவில் நிதி வந்து விடும்; அடுத்து ஆறு மாதங்களில், நிலமெடுப்புப் பணி முடிந்து விடும். அதன்பின், சில மாதங்களில் ரோடு விரிவாக்கம் செய்யப்படும்.'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us