Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டாப் 3,000 மரங்களுடன் குறுங்காடு வடவள்ளி ஊராட்சி அபாரம்

டாப் 3,000 மரங்களுடன் குறுங்காடு வடவள்ளி ஊராட்சி அபாரம்

டாப் 3,000 மரங்களுடன் குறுங்காடு வடவள்ளி ஊராட்சி அபாரம்

டாப் 3,000 மரங்களுடன் குறுங்காடு வடவள்ளி ஊராட்சி அபாரம்

ADDED : ஜூலை 16, 2024 02:22 AM


Google News
Latest Tamil News
கோவை;சூலூர் தாலுகா, வடவள்ளியில், ஊராட்சி நிர்வாகம் 3,000க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து, குறுங்காடுகளை உருவாக்கி, அசத்தலாக பராமரித்து வருகிறது.

சுல்தான்பேட்டை ஒன்றியம் வடவள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி, வேலப்பநாயக்கன்பாளையம், அக்கநாயக்கன்பாளையம் என மூன்று கிராமங்களிலும், இனி மரக்கன்று நடுவதற்கு இடமே இல்லை எனும் அளவுக்கு, தரிசு நிலம், அரசு புறம்போக்கு நிலங்களில் பல்வேறு வகையான மரங்கள் கொண்ட, குறுங்காடுகள் வளர்க்கப்படுகின்றன.

இதுதொடர்பாக, ஊராட்சித் தலைவர் கோவிந்தராஜ் கூறியதாவது:

வடவள்ளி சுடுகாடு அருகே 2.5 ஏக்கர் பரப்பில் 685 மரங்கள், வேலப்பநாயக்கன்பாளையத்தில் 180, அக்க நாயக்கன்பாளையத்தில் 900 மரக்கன்றுகள் நடப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நன்கு வளர்ந்துள்ளன.

வஞ்சியம்மன் கோவில் அருகே, புதர்க்காடாக இருந்த பகுதியை மாற்றி, மரக்கன்றுகளை நட்டுள்ளோம். புதிதாக 5 ஏக்கர் பரப்பில் தனியார் பங்களிப்புடன், மேலும் 1,000 மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.

வடவள்ளி சுடுகாடு அருகே, வெள்ளை மண். இதில் எதுவுமே வளராது என்ற நிலையில், செம்மண், உரக் கலவை கொட்டி, மரக்கன்றுகளை வெற்றிகரமாக வளர்த்துக் காட்டியுள்ளோம்.

வேம்பு, அரசு, இலவம், மந்தாரை, மலைவேம்பு, என வெவ்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.

நாவல், புற்றுநோயைத் தவிர்க்கும் திறன் கொண்டது என்பதால் 16 வகையான நாவல் மரங்களை நடவு செய்துள்ளோம். ஆக்சிஜனை அதிகம் உற்பத்தி செய்யும் மரங்களாக பூவரசு, புன்னை, புங்கன் கருதப்படுவதால் அவற்றை வளர்க்கிறோம்.

மனிதர்க்கு மட்டுமல்ல, பறவைகளுக்கும் உதவும் வகையில், சர்க்கரைப் பழம், கொய்யா, சீனிப்புளியங்கா, பாதாம், இலந்தை ஆகிய மரங்களையும் நட்டு பராமரித்து வருகிறோம். தனியார் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர்., பங்களிப்பில் உதவி வருகின்றன.

ஏறத்தாழ 3,000 மரங்களை பராமரித்து வருகிறோம். இவற்றை, சுற்றுச்சூழல் துறை 'டேக்' செய்து கண்காணித்து வருகிறது.

இங்கு குறுங்காடு வளர்ந்திருப்பதால், நல்ல மழை கிடைத்துள்ளது. சுற்றுவட்டார பகுதியிலேயே, சமீபத்திய மழையில் அக்கநாயக்கன்பாளையம் குட்டை மட்டும்தான் நிறைந்தது. இது எங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களைப் பயன்படுத்தி, மரங்களைப் பராமரிக்கிறோம். கட்சி பாகுபாடின்றி, அனைத்துக் கட்சி வார்டு உறுப்பினர்களும், மக்களும் ஒத்துழைப்பதால்தான் இது சாத்தியமானது.

இவ்வாறு, கோவிந்தராஜ் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us