/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மழை நீர் சேகரிக்க ஊருக்கு மட்டும்தானா உபதேசம்? அரசு கட்டடங்களில் உரிய கட்டமைப்பு காணோம் மழை நீர் சேகரிக்க ஊருக்கு மட்டும்தானா உபதேசம்? அரசு கட்டடங்களில் உரிய கட்டமைப்பு காணோம்
மழை நீர் சேகரிக்க ஊருக்கு மட்டும்தானா உபதேசம்? அரசு கட்டடங்களில் உரிய கட்டமைப்பு காணோம்
மழை நீர் சேகரிக்க ஊருக்கு மட்டும்தானா உபதேசம்? அரசு கட்டடங்களில் உரிய கட்டமைப்பு காணோம்
மழை நீர் சேகரிக்க ஊருக்கு மட்டும்தானா உபதேசம்? அரசு கட்டடங்களில் உரிய கட்டமைப்பு காணோம்
ADDED : ஜூன் 11, 2024 01:06 AM

கோவை:மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக இல்லாத தனியார் கட்டடங்களுக்கு அபராதம், எச்சரிக்கை விடுக்கும் மாநகராட்சி நிர்வாகம் அரசு கட்டடங்கள் மீதும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
2001 - 2003 ம் ஆண்டுகளில் நிலவிய கடுமையான வறட்சியால் தமிழகம் முன் எப்போதும் சந்தித்திராத தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்தது.
இதன் எதிரொலியாகவே அரசு, வீடுகள், கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டது.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் மட்டுமே கட்டட வரைபட அனுமதி கிடைக்கும் நிலை உள்ளது.
ஆனால், பல ஆண்டுகள் கடந்த பின்னும், இன்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு என்பது சம்பிரதாய சடங்காக மட்டுமே உள்ளது.
மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவும் எளிய வழிமுறையாகும்.
இக்கட்டமைப்பை ஏற்படுத்துவதன் வாயிலாக வறட்சி, வெள்ளம் ஆகியவற்றை சந்திக்கும் நிலை ஏற்படாது என்கின்றனர் வல்லுனர்கள். இதை ஏற்படுத்தாதது, முறையாக பராமரிக்காத, காரணங்களால், சிறிய மழைக்கும் குடியிருப்புகளை வெள்ளம் சூழும் நிலை உள்ளது.
கோவை மாநகராட்சி, குடியிருப்புகள், தனியார் கட்டடங்கள், மால்கள், வணிக வளாகங்களில் மழைநீர் கட்டமைப்பு குறித்து ஆய்வு செய்து, கட்டமைப்பை ஏற்படுத்தாவிடில், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசு கட்டடங்களில்?
ஆனால், புதிதாக கட்டப்பட்டுள்ள பல அரசு கட்டடங்களில், இந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. கட்டடங்களின் மொட்டை மாடிகளில் பெய்யும் மழைநீர் பைப்கள் வழியாக மழைநீர் கட்டமைப்புடன் இணைக்கப்பட வேண்டும் என, விதி உள்ளது. ஆனால், பெரும்பாலான கட்டடங்களில், இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதனுடன் எந்த ஒரு இணைப்பும் கொடுக்கப்படவில்லை.
மழை பெய்யும் போது, தரையில் செல்லும் நீர் மட்டுமே கட்டமைப்புக்குள் செல்கிறது. கட்டமைப்பும், தரை தளத்தை விட சற்று உயரத்தில் உள்ளதால், பல நேரங்களில் இக்கட்டமைப்பு பயனின்றி உள்ளது.
இதேபோல், தெற்கு தாசில்தார் அலுவலகம், அதன் அருகில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் என, எந்த ஒரு அரசு கட்டடத்திலும், மழைநீர், கட்டமைப்புக்கு செல்லும் இணைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை.
இவையனைத்துக்கும் மேல், கோவை அரசு மருத்துவமனையில், நுாற்றாண்டு கட்டடம், புதிதாக கட்டப்பட்டுள்ள ஜைகா கட்டடம் ஆகியவற்றிலும், முறையாக மழைநீர் கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை.
அரசு விதியை அரசு அமைப்புகளே மீறுவது குறித்து நடவடிக்கை எடுப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பில் சிறிய விதிமீறல்கள் இருந்தாலும், அக்கட்டட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி அதிகாரிகள், அரசு கட்டடங்களின் மீது தங்களது கவனத்தை திருப்ப வேண்டும்.