ADDED : ஜூலை 02, 2024 11:30 PM
கோவை:கோர்ட்டுக்கு அழைத்து செல்லாத ஆத்திரத்தில், பல்பை உடைத்து உடலில் காயம் ஏற்படுத்திய சிறைவாசி மீது, போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
எண்ணுாரை சேர்ந்தவர் தனசேகரன்,41. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், கடலுார் சிறையில் இருந்து கடந்த ஏப்., மாதம், கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து, கடலுார் கோர்ட்டுக்கு கோவையில் இருந்து, போலீசார் அடிக்கடி அழைத்துசென்று வந்துள்ளனர்.
நேற்று முன்தினம், கோர்ட்டுக்கு அழைத்து செல்லாமல் சிறையில் இருந்தவாறு, 'வீடியோ' அழைப்பு வாயிலாக தனசேகரனிடம் விசாரணை நடந்துள்ளது.
இதையடுத்து, கோர்ட்டுக்கு அழைத்துச்செல்லாத ஆத்திரத்தில், எலக்ட்ரிக் பல்பை உடைத்து தனது நெஞ்சு, கழுத்து, வயிற்றில் தனசேகரன் காயம் ஏற்படுத்தியுள்ளார்.
பணியில் இருந்த ஜெயில் வார்டனிடம், பல்பை காட்டி மிரட்டியதுடன், பணிக்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளார். ஜெயிலர் சிவராசன் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.