Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஒவ்வொரு மூன்றாண்டுக்கும் 17 சதவீதம்  உயர்வு

மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஒவ்வொரு மூன்றாண்டுக்கும் 17 சதவீதம்  உயர்வு

மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஒவ்வொரு மூன்றாண்டுக்கும் 17 சதவீதம்  உயர்வு

மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; ஒவ்வொரு மூன்றாண்டுக்கும் 17 சதவீதம்  உயர்வு

ADDED : மார் 14, 2025 06:14 AM


Google News
Latest Tamil News
கோவை : புற்றுநோய் பாதிப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பிற புற்றநோயை காட்டிலும், மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் பதிவுகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக டாக்டர்கள் தரப்பில் எச்சரிக்கின்றனர்.

மலக்குடல் மற்றும் பெருங்குடல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், நோயாளிகள் மட்டுமின்றி டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு இதன் அறிகுறி குறித்த விழிப்பணர்வு ஏற்படுத்தும் வகையில், தொற்றாத நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், மாநில அளவில் கோவையில் முன்மாதிரியாக, ' பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியும் திட்டம்' செயல்பாட்டில் உள்ளது.

முன்கூட்டியே கண்டறியும் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின் படி, கடந்த, 2018 ல் தமிழகத்தில் 77,138 பேர் புதிதாக புற்றுநோயாளிகளாக சிகிச்சையை துவக்கியுள்ளனர். குறிப்பாக, பிற புற்றுநோய் பாதிப்புகளை காட்டிலும் மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இணை பேராசிரியர் மற்றும் பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய் முன்கூட்டியே கண்டறியும் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் டாக்டர் செல்வராஜ் கூறியதாவது:

மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இப்பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. புள்ளிவிபரங்களின் படி, அனைத்து புற்றுநோய் பதிவு எண்ணிக்கையில் சென்னைக்கு அடுத்தபடியாக, கோவை இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழக அளவில் நான்காவதாக அதிகம் பாதிக்கும் புற்றுநோய் இடத்தில் மலக்குடல், பெருங்குடல் பாதிப்பு உள்ளன. கோவையை பொறுத்தவரையில் இரண்டாவதாக இப்பாதிப்பு உள்ளது. இதன் காரணமாகவே மாதிரி திட்டம் கோவையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு முறை பிற புற்றுநோய் பாதிப்புகள் 8-9 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், மலக்குடல், பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, 17 சதவீதம் அதிகரித்துள்ளது. பத்து ஆண்டுகளில் இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும். இப்புற்றுநோய் பொறுத்தவரையில் ஆரம்ப நிலை முதல் மூன்றாவது நிலை வரை கண்டறிந்தால், 100 சதவீதம் குணப்படுத்த இயலும்.

ஏன் இப்பாதிப்பு


உணவு பழக்கவழக்கங்களே இப்பாதிப்புக்கு முக்கிய காரணம். முன்பு, நார்சத்து அதிகம் நிறைந்த சிறுதானிய உணவுகளை நாம் எடுத்துக்கொண்டோம். தற்போது, முழுமையாக அரிசி, மைதா, துரித உணவுகள், அதிக இனிப்பு சுவை கொண்ட உணவு முறைகளை பின்பற்றுவதால் ஏற்படும் விளைவுதான். காய்கறி, பழங்கள், கீரைகள், சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது கழிவுகள் மலக்குடல், பெருங்குடலில் நீண்ட நேரம் தங்குவது இல்லை. ஆனால், மேற்குறிப்பிட்ட உணவுகள் எடுத்துக்கொள்ளும் போது, இரண்டு, மூன்று நாட்கள் கழிவுகள் தங்கி மெதுவாக வெளியேறுவதே முக்கிய காரணமாக உள்ளது.

அறிகுறிகள் என்னென்ன


பாரம்பரியமாக மரபு சார்ந்து இருப்பின் 40 வயது முதல் இதற்கான கொலனோஸ்கோபி ஸ்கிரீனிங் செய்துகொள்ளவேண்டியது அவசியம். பிறர், 45 வயதுக்கு மேல் அறிகுறி இருப்பின் கொலனோஸ்கோபி ஸ்கிரீனிங் செய்துகொள்ளவேண்டும். பசியின்மை, மலச்சிக்கல், எடை குறைதல், அஜீரணக்கோளாறுகள், மலத்தில் ரத்தம், மாறுபட்ட மல பழக்கம் இதற்கு முக்கிய அறிகுறியாக உள்ளது. இரண்டு வாரத்திற்கு மேல் மாறுபட்ட மல பழக்கம் இருந்தால் உடனடியாக இப்பாதிப்புக்கான ஸ்கிரீனிங் செய்து கொண்டாலே முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும்.

டாக்டர்கள் கவனியுங்க


மலச்சிக்கல் பாதிப்பு இரண்டு வாரங்களுக்கு மேல் இருந்தாலே, கொலனோஸ்கோபி ஸ்கிரீனிங் பரிந்துரைக்கவேண்டியது அவசியம். இதுகுறித்த விழிப்புணர்வு டாக்டர்களுக்கு இல்லாமையால் மலச்சிக்கல், அஜீரணக்கோளாறு போன்ற பாதிப்புகளுக்கு சிகிச்சை பார்த்துவிடுகின்றனர். முன்மாதிரி திட்டத்தில் இது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

நார்ச்சத்து அவசியம்


நார்ச்சத்து அதிகம் உள்ள தானியங்கள், கீரைகள், காய்கறிகளை அதிகம் உணவுகளில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பாலிஷ் செய்த அரிசியில் இச்சத்து சுத்தமாக இருக்காது. கிழங்குவகைகளில் நார்ச்சத்து இல்லை. 'கோல்டன் டயட்' என்று நாம் கூறுவது ராகி உணவுகள்; இதில், அதிக நார்ச்சத்து உள்ளன. நம் அன்றாட உணவு பழக்கத்தில் அரிசியை முழுவதுமாக தற்போது தவிர்க்க முடியாது.ஆனால், ஒரு வேளைக்காவது சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். மைதா சார்ந்த உணவுகளை தவிர்ப்பதை காட்டிலும் தடை செய்துவிடலாம் என்ற அளவில் பாதிப்புகள் உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us