/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் தொடரும் மழையால் உக்கடம் பெரிய குளம் நிரம்பியது கோவையில் தொடரும் மழையால் உக்கடம் பெரிய குளம் நிரம்பியது
கோவையில் தொடரும் மழையால் உக்கடம் பெரிய குளம் நிரம்பியது
கோவையில் தொடரும் மழையால் உக்கடம் பெரிய குளம் நிரம்பியது
கோவையில் தொடரும் மழையால் உக்கடம் பெரிய குளம் நிரம்பியது
ADDED : ஜூலை 25, 2024 11:09 PM

கோவை : கடந்த சில நாட்களாக பெய்த மழையால், நீர் வரத்து அதிகரித்ததால், உக்கடம் பெரிய குளம் நேற்று நிரம்பி வழிந்தது.
கோவை மாநகராட்சி பராமரிப்பில் ஒன்பது குளங்கள் உள்ளன. இதில், உக்கடம் பெரிய குளம் முதன்மையானது. நொய்யல் ஆற்றில் இருந்து சேத்துமா வாய்க்கால் மூலமாகவும், செல்வ சிந்தாமணி குளத்தின் உபரி நீரும் இக்குளத்துக்கு வந்தடையும். இதன் உபரி நீர் வாலாங்குளத்துக்கு செல்லும். களிங்கு பகுதியில் வழிந்தோடும் நீர் மீண்டும் நொய்யல் ஆற்றுக்குச் செல்லும்.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் இக்குளம் பொலிவூட்டப்பட்டு, பொழுதுபோக்கிடமாக மாற்றப்பட்டு இருக்கிறது. விடுமுறை தினங்கள் மற்றும் மாலை நேரங்களில், பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக, கோவை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு காணப்பட்டதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சேத்துமா வாய்க்கால் வாயிலாக உக்கடம் பெரிய குளத்துக்கு நீர் கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. அதேநேரம், செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து உபரி நீர் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, பெரிய குளம் நேற்றுநிரம்பியது.
களிங்கு பகுதியில் அணையில் உள்ள கண்கள் போல் அமைத்துள்ள கட்டமைப்பு வாயிலாக உபரி நீர் வழிந்து, நொய்யல் ஆற்றுக்குச் சென்றது. அதனால், உக்கடத்தில் இருந்து வாலாங்குளத்துக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது. வாலாங்குளத்தின் உபரி நீர் சிங்காநல்லுாருக்கு திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு பருவ மழை பெய்தபோது, வாலாங்குளத்தின் உபரி நீர் திருச்சி ரோட்டில் வழிந்தோடியது. அதற்கு தீர்வு காண, ரோட்டுக்கு கீழ், 'கான்கிரீட் பாக்ஸ்' வடிவில் மழை நீர் வடிகால் கட்டப்பட்டது.
அவ்வழித்தடம் வாயிலாக சிங்காநல்லுார் குளத்துக்கு நேற்று தண்ணீர் அனுப்பப்பட்டது. அவ்வப்போது மழை பெய்து வருவதால், நீர் நிலைகளையும், நீர் வழித்தடங்களையும் மாநகராட்சி பொறியியல் பிரிவு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.