/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'என்ன நடக்கப் போகுதோ தெரியவில்லை' ஊராட்சி தலைவர்கள் புலம்பல் 'என்ன நடக்கப் போகுதோ தெரியவில்லை' ஊராட்சி தலைவர்கள் புலம்பல்
'என்ன நடக்கப் போகுதோ தெரியவில்லை' ஊராட்சி தலைவர்கள் புலம்பல்
'என்ன நடக்கப் போகுதோ தெரியவில்லை' ஊராட்சி தலைவர்கள் புலம்பல்
'என்ன நடக்கப் போகுதோ தெரியவில்லை' ஊராட்சி தலைவர்கள் புலம்பல்
ADDED : ஜூன் 06, 2024 11:23 PM
சூலுார்:வரும் உள்ளாட்சி தேர்தலில் என்ன நடக்கப்போகுதோ தெரியவில்லை, என, ஊராட்சி தலைவர்கள் புலம்பி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், வரும் டிசம்பரில் முடிவடைய உள்ளது. இதையடுத்து, தேர்தலை நடத்த, தமிழக தேர்தல் கமிஷன் பணிகளை துவக்கிஉள்ளது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளும் ஒரு புறமும் நடந்து வருகிறது.
அதன்படி, கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகங்களிடம் எந்தெந்த ஊராட்சிகள், பேரூராட்சிகளை தங்களது நிர்வாகத்துடன் இணைக்கலாம் என, உத்தேச பட்டியலை கேட்டுள்ளது.
அதேபோல், எந்தெந்த பெரிய, வருமானம் உள்ள ஊராட்சிகளை, பேரூராட்சிகளாக்க வேண்டும் என, கருத்துருக்கள் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், எந்தெந்த பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்தலாம் என, கருத்துரு கேட்கப்பட்டுளள்து. அப்படி கூடுதலாக சேர்க்கப்படும் பகுதிகளுடன் கூடிய வரைபடங்களை கேட்டு பெற்றுள்ளது நகராட்சி நிர்வாகத்துறை.
அதன்படி, சூலுார் பேரூராட்சியுடன் கலங்கல் ஊராட்சியையும், பள்ளபாளையம் பேரூராட்சியுடன் பீடம் பள்ளி ஊராட்சியையும் இணைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஊரக வளர்ச்சி துறை சார்பில், பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க திட்டமிடப்பட்டு, ஊராட்சி தலைவர்களிடம் கடிதம் பெற்றுள்ளது.
அதன்படி, சின்னியம்பாளையம் ஊராட்சி நிர்வாகம், ஊராட்சியாகவே தொடர விருப்பம் தெரிவித்துள்ளது.
நீலம்பூர், அரசூர், முத்துக்கவுண்டன் புதூர், மயிலம்பட்டி , கணியூர், பட்டணம் ஊராட்சி நிர்வாகங்கள், தங்கள் ஊராட்சியை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கலாம் என, கடிதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் தயாரித்துள்ள உத்தேச பட்டியலில் சின்னியம்பாளையம், மயிலம் பட்டி, நீலம்பூர், முத்துக்கவுண்டன் புதூர், பட்டணம் ஊராட்சிகளும், இருகூர் பேரூராட்சியும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஊராட்சி தலைவர்கள் புலம்பல்
ஊராட்சிகளை பேரூராட்சியாகவோ, அல்லது அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைப்பதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
மத்திய அரசு திட்டங்களும், நிதியும் ஊராட்சிக்கு நேரடியாக கிடைத்து வருகின்றன. இணைத்தால் அவை கிடைக்காது. நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பர். வரியினங்கள் அதிகரிக்கும்.
குறைந்த வருவாய் உள்ள கிராமப்புற மக்கள் நெருக்கடிக்குள் உள்ளாவர். அதனால், பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்கலாம்.
தரம் உயர்த்துகிறேன் என்ற பெயரில் எது செய்தாலும் மக்களுக்குத்தான் பாதிப்பு. கருத்து கேட்கின்றனர், கடிதம் கேட்கின்றனர். மொத்தத்தில் என்ன நடக்கபோகுதோ தெரியவில்லை. இவ்வாறு, ஊராட்சி தலைவர்கள் புலம்பினர்.