Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் போலீசின் நடவடிக்கை எத்தனை நாள் நீடிக்கும்! பிளாக்கில் மது விற்காததால் குற்ற வழக்குகள் குறைந்தது

கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் போலீசின் நடவடிக்கை எத்தனை நாள் நீடிக்கும்! பிளாக்கில் மது விற்காததால் குற்ற வழக்குகள் குறைந்தது

கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் போலீசின் நடவடிக்கை எத்தனை நாள் நீடிக்கும்! பிளாக்கில் மது விற்காததால் குற்ற வழக்குகள் குறைந்தது

கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் போலீசின் நடவடிக்கை எத்தனை நாள் நீடிக்கும்! பிளாக்கில் மது விற்காததால் குற்ற வழக்குகள் குறைந்தது

ADDED : ஜூன் 24, 2024 10:26 PM


Google News
பெ.நா.பாளையம்;கள்ளச்சாராய விற்பனையில் போலீசார் காட்டும் தற்போதைய கெடுபிடி நடவடிக்கை எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை. ஆனால், பிளாக்கில் மது விற்காததால் குற்ற வழக்குகள் குறைந்துள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த, 18ம் தேதி கள்ள சாராயம் வாங்கி குடித்தவர்கள் பலியாகினர். இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை, 56ஐ கடந்துள்ளது. கள்ளச்சாராயம் மற்றும் போலி மது விற்பனையை தடுக்க, தற்போது தமிழக அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் போலி மது விற்பனையை தடுக்கவும், கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கைது இல்லை


பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சின்னதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் போலிமது விற்பனை மற்றும் கள்ள சாராயம் விற்பனை தொடர்பாக ஆய்வு மற்றும் சோதனைகள் நடந்து வருகின்றன. சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளில் கள்ள சாராய விற்பனை தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

இது குறித்து, போலீசார் கூறுகையில், 'கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தற்போது, அவர்கள் மீண்டும் சட்டத்துக்கு புறமான செயல்களில் ஈடுபடுகிறார்களா அல்லது வேறு தொழில் செய்கிறார்களா என, கண்காணிக்கப்படுகின்றனர். கள்ளச்சாராயம் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக மது விற்பனை குறித்து பொது மக்களுக்கு தகவல் தெரிந்தால், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன், 94981 01189 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்' என்றனர்.

அரசு அறிவித்த நேரத்தில் மட்டுமே விற்பனை


டாஸ்மாக் நிர்வாகம், மதுபான கடை மேற்பார்வையாளர்களின் கூட்டத்தை நடத்தி, அதில் 'மதியம், 12.00 மணி முதல் இரவு, 10.00 மணி வரை அரசு அறிவித்த நேரத்தில் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளது. டாஸ்மாக் மதுபான கடையை ஒட்டி உள்ள பாரில் நிர்ணயிக்கப்பட்ட நேரங்களை தவிர, பிற நேரத்தில் மது சப்ளை செய்யப்படுகிறதா என்பதை கண்காணித்து, உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கூட்டத்தில் மதுவை மொத்தமாக கொள்முதல் செய்யும் பிரச்னையில், மதுபான கடை மேற்பார்வையாளர்கள் பலிகடா ஆக்கப்படுகின்றனர் பிரச்னைக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும். அனைத்து மதுபான கடைகளிலும் 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும்' என்றனர்.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'டாஸ்மாக் மதுபான கடையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தவிர, பிற நேரங்களில் மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனையை தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒரு சில நாட்கள் மட்டுமே கடைபிடிக்காமல் எப்போதும், இப்பணியை செய்ய போலீசார் முன் வரவேண்டும். இதை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும். குற்ற வழக்குகளும் குறையும்' என்றனர்.

வழக்குகள் குறைந்தன

கடந்த, 19ம் தேதி முதல் டாஸ்மாக்கில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தவிர, பிற நேரத்தில் ப்ளாக்கில் மது விற்பனை செய்யப்படுவது இல்லை. இதை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதனால் வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் 'குடிமகன்கள்' இடையே மோதல் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவது குறைந்துள்ளது. சட்டவிரோத மது விற்பனை இல்லாததால் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்படுகிறது. இதனால் அடிதடி வழக்குகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. டாஸ்மாக்கில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டால், அதற்கு காரணமான போலீசார் சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், டிஸ்மிஸ் நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்படுவார் என, மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us