/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'ஆன்லைன்' மருந்து விற்பனை கொள்கை; மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 'ஆன்லைன்' மருந்து விற்பனை கொள்கை; மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
'ஆன்லைன்' மருந்து விற்பனை கொள்கை; மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
'ஆன்லைன்' மருந்து விற்பனை கொள்கை; மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
'ஆன்லைன்' மருந்து விற்பனை கொள்கை; மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 04, 2024 04:14 AM

சென்னை : 'ஆன்லைன்' வாயிலாக மருந்து விற்பனை நடப்பது குறித்து, மத்திய அரசு விரைந்து கொள்கையை இறுதி செய்து வெளியிடும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்ப்பு
மத்திய அரசு வகுத்துள்ள வரைவு விதிகளுக்கு ஒப்புதல் பெற்று வெளியிடும் வரை, ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு கெமிஸ்ட்ஸ் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் சங்கம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்கவும், மனுவில் கோரப்பட்டது.
உத்தரவு
இந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. பொது மக்கள் நலன் கருதி, ஆன்லைனில் மருந்து விற்பனை தொடர்பாக வகுத்துள்ள விதிமுறைகளை, விரைந்து கெஜட்டில் வெளியிடவும், அதுவரை, ஆன்லைனில் மருந்து விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது எனவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 2018ல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இடைக்காலத் தடை
இதை எதிர்த்து, ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் சார்பில், மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஆன்லைனில் மருந்து விற்பனையை மேற்கொள்ளக் கூடாது என்ற உத்தரவுக்கு, இடைக்காலத் தடை விதித்தது.
இதையடுத்து, இம்மனுக்கள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தன.
மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, “வரைவு விதிகள் இறுதி செய்யும் பணியில் முன்னேற்றம் உள்ளது. வர்த்தகர்கள், பொது மக்கள் எழுப்பிய பிரச்னைகளுக்கு தீர்வு காண, புதிய கொள்கை வகுக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
“டில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, மத்திய சுகாதார அமைச்சக இணைச்செயலர் ஆஜராகி, ஆன்லைன் மருந்து விற்பனை குறித்த கொள்கை வகுக்க, நான்கு மாதங்கள் அவகாசம் கோரியுள்ளார்,” என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்தப் பிரச்னையை, ஏற்கனவே டில்லி உயர் நீதிமன்றம் விசாரிப்பதாலும், புதிய கொள்கையை இறுதி செய்யும் பணியில் மத்திய அரசு உள்ளதாலும், மேல்முறையீட்டு மனுக்களை பைசல் செய்கிறோம்.
புதிய கொள்கையை விரைந்து இறுதி செய்து வெளியிடும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. அதுவரை, தற்போதைய நிலை தொடரும்.
உரிமம் பெற்ற மருந்து நிறுவனங்கள் வாயிலாக மட்டுமே, ஆன்லைனில் மருந்து விற்பனையை மேற்கொள்ள முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. இதை மீறினால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.