Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வந்தது நிதி; ஆட்சி மாறியதில் அதோ கதி! * கணபதியில் ரோடு விரிவாக்கத்துக்கு நிலமெடுப்பதற்கு... * அரசாணை வந்ததே தெரியாத கோவை அதிகாரிகள்!

வந்தது நிதி; ஆட்சி மாறியதில் அதோ கதி! * கணபதியில் ரோடு விரிவாக்கத்துக்கு நிலமெடுப்பதற்கு... * அரசாணை வந்ததே தெரியாத கோவை அதிகாரிகள்!

வந்தது நிதி; ஆட்சி மாறியதில் அதோ கதி! * கணபதியில் ரோடு விரிவாக்கத்துக்கு நிலமெடுப்பதற்கு... * அரசாணை வந்ததே தெரியாத கோவை அதிகாரிகள்!

வந்தது நிதி; ஆட்சி மாறியதில் அதோ கதி! * கணபதியில் ரோடு விரிவாக்கத்துக்கு நிலமெடுப்பதற்கு... * அரசாணை வந்ததே தெரியாத கோவை அதிகாரிகள்!

ADDED : ஜூலை 15, 2024 10:36 PM


Google News
-நமது நிருபர்-

கணபதியில் ரோடு விரிவாக்கத்துக்கு, நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கியதற்கு, அரசாணை வெளியிட்டதே தெரியாத அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட நிதி, கோவையில் எந்தப் பணிக்கும் பயனின்றி வீணாகியுள்ளது.

கோவை நகரில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாகவுள்ள, கணபதி டெக்ஸ்டூல் பாலத்திலிருந்து சரவணம்பட்டி வரையிலும், மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

இதனால், அந்த வழித்தடத்தில் தினமும் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பல லட்சம் மக்கள், தினமும் சிரமப்படுகின்றனர்.

இந்த ரோட்டை முதலில் விரிவாக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது; அதன்பின், பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.

ஆனால் மேற்கு மற்றும் கிழக்கு புறவழிச்சாலைகள் மற்றும் கோவை-சத்தி பசுமை வழிச்சாலையும் அமைக்கப்படுவதால், இந்த பாலத்தை கைவிட்டு, ரோடு விரிவாக்கத்துக்கே மீண்டும் திட்டமிடப்பட்டுள்ளது.

2020ல் அ.தி.மு.க., ஆட்சியின்போதே, கணபதி பகுதியில் உள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள நெரிசலுக்காவது தீர்வு காண்பதற்கு, அப்பகுதியை மட்டும் விரிவாக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதற்கான நிலமெடுப்பதற்கு, நகர ஊரமைப்புத் துறையிடமிருந்து, அதாவது அப்போதிருந்த உள்ளூர் திட்டக்குழுமத்திடம் நிதியைப் பெற தீர்மானிக்கப்பட்டது.

நேரடியாக தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு நிதி தரமுடியாது என்பதால், மாநகராட்சிக்கு இந்த நிதியை வழங்கவும், அரசு ஒப்புதல் அளித்தது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஏற்கனவே தயாரித்திருந்த நில ஆர்ஜித பிரேரணையை எடுத்துக் கொண்டு, அந்த அளவீட்டின்படி ரோடு விரிவாக்கத்துக்கு நிலமெடுப்பதற்கு, மாநகராட்சி சார்பில், நகர ஊரமைப்புத் துறையிடம் நிதி கோரப்பட்டது.

கணபதி வேலன் தியேட்டர் பகுதியிலிருந்து, சூர்யா மருத்துவமனை வரையிலும், இரு புறமும் ரோடு விரிவாக்கம் மற்றும் மூன்று ரோடுகள் சந்திப்பு விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்குமாறு, 2020 அக்.,12ல் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், 151 பேர்களிடமிருந்து 73 ஆயிரத்து 250 சதுர அடி நிலம் கையகப்படுத்த வேண்டுமென்று கணக்கிடப்பட்டிருந்தது.

அந்தத் தீர்மானத்தை ஏற்று, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்பு வளர்ச்சித்துறை, ரூ.38 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, 2021 பிப்.,11 ல் அரசாணை (எண்: 32) பிறப்பித்தது. அடுத்த சில நாட்களில் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், அந்த நிதி என்னவானது என்றே தெரியவில்லை.

அடுக்கடுக்காக காரணங்கள்

முதலில் ஓராண்டுக்கும் மேலாக, கொரோனா காரணம் காட்டப்பட்டது. ஆனால் இயல்பு நிலை திரும்பிய பின்னும் நிதி ஒதுக்கப்படவில்லை; நிலம் கையகப்படுத்தப்படவில்லை; அதற்குப் பின்புதான், சத்தி ரோட்டில் பாலம் கட்டுவது என்றும், அதைக் கைவிட்டு, விரிவாக்கம் செய்வது என்றும் திட்டங்கள் மாறிக் கொண்டேயிருக்கின்றன; இன்று வரை நெரிசல் குறையவேயில்லை..

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த நிதியை வாங்கி, நிலத்தைக் கையகப்படுத்தி, விரிவாக்கம் செய்திருந்தால், ஓரளவுக்காவது அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும். அதைச் செய்யவில்லை.

அந்த நிதி என்னவானது என்று, கோவை மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்துக்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு, 'இப்பொருள் தொடர்பாக அரசாணை ஏதும் பெறப்படவில்லை' என்று பதில் தரப்பட்டுள்ளது. தங்கள் துறை சார்பில் வெளியிட்ட அரசாணையைப் பற்றியே தெரியாத அதிகாரிகளால், மாநகராட்சிக்கு வந்திருக்க வேண்டிய நிதி, கடைசி வரை வரவேயில்லை. அரசாணையை இணைத்து, மேல் முறையீடு செய்தும், நகர ஊரமைப்பு அலுவலகத்திலிருந்து பதிலும் வரவில்லை.

ஆட்சி மாறினால் அதிகாரிகள் மாறலாம்; அரசாணை எப்படி மாறும் அல்லது எப்படி மாயமாகும்?

வாங்குவதெல்லாம் எங்கே போகுது?

சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துக்கு அடுத்தபடியாக, கோவை மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில்தான், மேம்பாட்டுக் கட்டணம், கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணம் மூலமாக, அரசுக்கு பல நுாறு கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிதியை வைத்து, கோவையில் திட்டச்சாலை, நடை மேம்பாலம், பூங்கா, மைதானம் என கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.சென்னையில் இந்த நிதியை வைத்து, ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மேம்பாட்டுப் பணிகள் நடக்கின்றன. ஆனால் கோவையில் இந்த நிதியைப் பெறுவதற்கே, மாநகராட்சி நிர்வாகம் முயற்சி செய்வதில்லை; இதற்காக கோவையிலுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கவுன்சிலர்கள் அனைவரும் ஒருமித்து குரல் கொடுத்து, இந்த நிதியைப் பெற்று, நகர வளர்ச்சிக்குப் பயன்படுத்துவது அவசியம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us