/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நோய், வறட்சியால் தென்னை சாகுபடி பாதிப்பு நிவாரணம் கிடைக்காததால் விவசாயிகள் கண்ணீர் நோய், வறட்சியால் தென்னை சாகுபடி பாதிப்பு நிவாரணம் கிடைக்காததால் விவசாயிகள் கண்ணீர்
நோய், வறட்சியால் தென்னை சாகுபடி பாதிப்பு நிவாரணம் கிடைக்காததால் விவசாயிகள் கண்ணீர்
நோய், வறட்சியால் தென்னை சாகுபடி பாதிப்பு நிவாரணம் கிடைக்காததால் விவசாயிகள் கண்ணீர்
நோய், வறட்சியால் தென்னை சாகுபடி பாதிப்பு நிவாரணம் கிடைக்காததால் விவசாயிகள் கண்ணீர்
ADDED : ஜூலை 13, 2024 07:45 PM

பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுப்பகுதியிலும், கேரள எல்லை பகுதியிலும், தென்னை மரங்களில், வேர் வாடல் நோய், வெள்ளை ஈ பூச்சி, குருத்து கட்டை நோய்கள் தாக்குதல், வறட்சி போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக வளர்த்த தென்னை மரங்கள் மடிந்து போவதை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் பொள்ளாச்சியில் நடந்த விழாவில், வேர்வாடல் நோய் பாதித்த தென்னை மரங்களை அகற்ற, 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். லோக்சபா தேர்தலுக்கு முன், சில விவசாயிகளுக்கு அந்த நிவாரணம் வழங்கப்பட்டது. அதன் பின், விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அரசின் நிவாரணமும் கிடைக்காமல், வறட்சியால் வாடிய மரங்களை வெட்டவும் முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
பி.ஏ.பி., பாசன விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், ''தென்னை வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்ற ஒதுக்கப்பட்ட நிவாரணம் கிடைக்கவில்லை. வறட்சியால் பாதித்த மரங்களுக்கு நிவாரணம் கேட்டும் கிடைக்கவில்லை. காய்ந்த மரங்களுக்கும் உரிய விலை இல்லை. இதனால், மரணித்த மரங்களை வெட்டி அகற்ற வழியின்றி விவசாயிகள் அப்படியே விட்டுள்ளனர்.
''வெட்டப்பட்ட மரங்களை கணக்கிட்டு அரசு நிவாரணம் வழங்கினால் மட்டுமே வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். எதிர்பார்த்த பருவமழையும் போதியளவு கிடைக்கவில்லை. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.
தமிழக தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு இணை செயலர் பத்மநாபன் கூறுகையில், ''கேரளா வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அகற்ற ஹெக்டேர் ஒன்றுக்கு, 32 மரங்களுக்கு, தலா, 1,000 ரூபாய் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான விவசாயிகளுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.