/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அட்டை கடியால் வன ஊழியர்கள் அவதி தேவையான உபகரணம் வழங்க எதிர்பார்ப்பு அட்டை கடியால் வன ஊழியர்கள் அவதி தேவையான உபகரணம் வழங்க எதிர்பார்ப்பு
அட்டை கடியால் வன ஊழியர்கள் அவதி தேவையான உபகரணம் வழங்க எதிர்பார்ப்பு
அட்டை கடியால் வன ஊழியர்கள் அவதி தேவையான உபகரணம் வழங்க எதிர்பார்ப்பு
அட்டை கடியால் வன ஊழியர்கள் அவதி தேவையான உபகரணம் வழங்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 27, 2024 12:29 AM
பொள்ளாச்சி;அட்டைப் பூச்சி கடியில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில், முட்டிவரை நீளமுள்ள காலுறை வழங்க வேண்டும் என, வன ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி, உடுமலை, அமராவதி, வந்தரவு, கொழுமம் ஆகிய எட்டு வனச்சரகங்களை உள்ளடக்கி ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது.
தமிழக - கேரள மாநில எல்லையை ஒட்டி, வனப்பகுதிகள் அமைந்துள்ளதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, வனவர், வனக்காவலர், வாட்சர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்களை அடங்கிய குழுவினர், அவ்வப்போது, வனப்பகுதிக்குள் ரோந்து செல்கின்றனர்.
தினமும் நேரடியாகக் கண்டறியப்படும் விலங்கினங்களின் நடமாட்டம் குறித்து பதிவும் செய்யப்படுகிறது. இவ்வாறு, வனப்பகுதிக்குள் ரோந்துப் பணியில் ஈடுபடும் குழுவினருக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவது கிடையாது.
குறிப்பாக, வனப்பகுதிகளில் 'லீச்' எனப்படும் அட்டைப் பூச்சி கடிக்கு ஆளாகி வருகின்றனர். வனப்பகுதிகளில், தற்போது, மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அட்டை பூச்சி கடியில் இருந்து பாதுகாக்க, புகையிலைத் துாளில் தேங்காய் எண்ணெய் சேர்த்து காலில் தேய்த்தும், வேப்ப எண்ணெய் தடவியும் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, வன ஊழியர்கள் கூறியதாவது:
இந்த அட்டை பூச்சி கறுப்பு வண்ணத்தில், பிடித்து இழுப்பதற்கு சாத்தியமில்லாத, ஒரு இஞ்ச் நீளத்தில் சிறியதாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். ரோந்து பணியில் ஈடுபடும் போது, கால் விரல்களுக்கு இடையிலும், கை, வயிறு, முதுகு, என உடம்பின் அனைத்து பகுதிகளிலும் ஏறிக் கொள்ளும்.
அதனை உடனே பிடித்து இழுக்காமல், தீக்குச்சி உதவியுடன் அகற்ற வேண்டியிருக்கும். ரத்தம் ஒழுகினால் அதனை தடுக்க மருந்து எதுவும் கிடையாது. ரோந்து பணியில் ஈடுபடும் வனத்துறையினருக்கு, அட்டை கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில், முட்டி வரை நீண்டுள்ள காலுறை வழங்க வேண்டும்.
இல்லையெனில், டாக்டர்கள் ஆலோசனைப்படி, தடுப்பு மருந்துகள் கண்டறிந்து வழங்க உயரதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.