/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வனத்துறையினருக்கு 'டிரோன்' இயக்க பயிற்சி வனத்துறையினருக்கு 'டிரோன்' இயக்க பயிற்சி
வனத்துறையினருக்கு 'டிரோன்' இயக்க பயிற்சி
வனத்துறையினருக்கு 'டிரோன்' இயக்க பயிற்சி
வனத்துறையினருக்கு 'டிரோன்' இயக்க பயிற்சி
ADDED : ஜூன் 15, 2024 01:41 AM

கோவை:கோவை, தமிழ்நாடு வன உயர் பயிற்சியகத்தில், டிரோன் இயக்குவதற்கான, ஒரு வார பயிற்சி வனத்துறையினருக்கு வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத் தடுப்புக்கான பசுமைத் திட்டத்தின் கீழ், நடக்கும் இப்பயிற்சியில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வனத்துறையினர் பங்கேற்றுள்ளனர். வரும் 17ம் தேதி பயிற்சி நிறைவடைகிறது.
முதன்மை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் கூறுகையில், “ஏற்கனவே பல்வேறு குழுக்களாக வனத்துறையினருக்கு, டிரோன் இயக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஒரு வார கால பயிற்சி 20 பேருக்கு அளிக்கப்படுகிறது.
வனப்பகுதியைக் கண்காணித்தல், தீத்தடுப்பு, மனித வனவிலங்கு மோதல், மீட்புப் பணிகள், கணக்கெடுப்பு போன்ற பல்வேறு பணிகளில், டிரோன்களைப் பயன்படுத்த முடியும். வனம் சார்ந்த பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ள, இது உதவியாக இருக்கும்,” என்றார்.
கோவையைச் சேர்ந்த ஸ்கைவாக் டிரோபோடிக்ஸ் நிறுவனத்தின் சுரேஷ் நாராயணன் தலைமையிலான டிரோன் பயிற்சியாளர்கள், பயிற்சியை வழங்கி வருகின்றனர்.
சுரேஷ் நாராயணன் கூறுகையில், “முதலில் டிரோன்கள் குறித்த, அடிப்படை கற்றுக் கொடுக்கப்படுகிறது. டிரோன்களைப் போன்ற மாதிரிகளை இயக்க கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதையடுத்து களத்தில் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது,” என்றார்.
உதவி வனப் பாதுகாவலர் செந்தில், பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். டிரோன்களை இயக்கும்போது, வன உயிரினங்களின் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கற்பிக்கப்படுகிறது.