/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உங்களுக்கும் வேண்டுமா ஒரு செல்லக்குழந்தை? உங்களுக்கும் வேண்டுமா ஒரு செல்லக்குழந்தை?
உங்களுக்கும் வேண்டுமா ஒரு செல்லக்குழந்தை?
உங்களுக்கும் வேண்டுமா ஒரு செல்லக்குழந்தை?
உங்களுக்கும் வேண்டுமா ஒரு செல்லக்குழந்தை?
ADDED : ஜூலை 21, 2024 01:01 AM

அந்தக் காலத்தில் நமது பாட்டிகள் பத்து, பதினைந்து குழந்தைகளைக் கூட அடுத்தடுத்த ஆண்டுகளில் அசால்டாகப் பெற்றுக் கொண்ட நிலையில், இன்று ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளவே, பெற்றோர் லட்சக்கணக்கில் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. காலம் கடந்த திருமணம், வாழ்க்கை முறை மாற்றம் போன்ற பல காரணங்களால், பலருக்கு குழந்தை பேறுக்கான வாய்ப்பும் குறைந்து வருகிறது.
ஏன் இந்த நிலை? விரிவாக விளக்குகிறார் பிரபல குழந்தைப்பேறு டாக்டர் அவந்தி கிருபா சங்கர்.
குழந்தைப்பேறு குறைவதற்கான காரணங்கள் என்ன?
முன்பெல்லாம் பெண்கள் 20 முதல் 22 வயதில், திருமணம் செய்து கொண்டு நிறைய குழந்தை பெற்றுக் கொண்டனர். அப்போதைய வாழ்க்கை முறை, உணவு முறை, உடல் உழைப்பு எல்லாமே வேறு.
இப்போது வாழ்க்கை முறை, உணவு முறை, தூக்கம் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம், உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாதது, அதிக உடல் பருமன், காற்று மாசுபாடு, கதிர்வீச்சு போன்றவையே, குழந்தைப் பேறு குறைய முக்கிய காரணமாகும்.
மாதவிடாய்ப் பிரச்னை பாதிப்பை ஏற்படுத்துமா?
28 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை, மாதவிடாய் சுழற்சி முறையில் நடக்க வேண்டும். ஏதாவது ஒரு சுழற்சியில் மாற்றம் இருப்பின், அது எந்தவித பிரச்னையையும் உருவாக்காது. ஆனால், தொடர் சுழற்சி மாற்றம் இருந்தால், கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், கருமுட்டை குறைய வாய்ப்புள்ளது.
இவர்கள் என்ன செய்ய வேண்டும்... என்ன செய்யக்கூடாது?
மாதவிடாய் பிரச்னை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை தைராய்டு, புரொலாக்டின், ஏ.எம்.ஹெச்., ஆர்.பி.எஸ். பரிசோதனை செய்து கொள்வது அவசியம். பாலிஸ்டிக் ஓவரிஸ் பிரச்னை காரணமாக, சிறிய வயதிலேயே சர்க்கரை நோய் பாதிப்பு வருகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நிறைந்த உணவு, தின்பண்டங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைப் பெற சரியான வயது எது?
குழந்தை பெற்றுக் கொள்வதற்கான சரியான வயது, 21 முதல் 35 வயதுதான். 35 வயதுக்கு மேல் இயற்கையாகவே, கருமுட்டையின் தரம் குறைய ஆரம்பிக்கும். இதனால், குழந்தைப் பேறுக்கான வாய்ப்பு குறையும் அபாயம் உள்ளது.
மருந்துகள் உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்துமா?
குழந்தைப் பேற்றைத் தடுக்க, அதிக மருந்துகளை எடுத்துக் கொள்வது, தொடர்ந்து அதிக முறை கருக்கலைப்பு செய்வது கர்ப்பப்பையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் குழந்தைக்கும் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். கருக்கலைப்பு செய்து கொள்வதை தவிர்க்க முடியா விட்டால், முறையாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. சில சமயம் கருக்குழாயில் கரு உருவாகியிருந்தால், அது உயிரிழப்பையே ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எவ்வித குறைபாடுகளால் கருமுட்டை குறையும்?
தலைமுறையாக பிரச்னை இருப்பது, மரபணு குறைபாடுகள், வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால், இளம் வயதிலேயே கருமுட்டை குறையும் வாய்ப்புள்ளது.
இப்பிரச்னை உள்ளவர்கள், இளம்வயதில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வது நல்லது. பெண்களுக்கு பிறக்கும்போது 4 லட்சம் கருமுட்டைகள் இருக்கும். வளர, வளர இது குறைந்துகொண்டே வரும். 35 முதல் 40 வயது வரை, இது வேகமாக குறைய ஆரம்பிக்கும்.
திருமணம், குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவதால், ஏற்படும் பாதிப்பு என்ன?
35 வயதில் திருமணம் செய்ய விரும்புவோர் அல்லது குழந்தைப் பெறுவதை தள்ளிப்போட நினைப்பவர்கள், இளம் வயதிலேயே கருமுட்டையை உறைய வைக்கும் முறையைப் பின்பற்றலாம். இதற்கு ஏ.எம்.ஹெச். என்ற, ரத்தப் பரிசோதனை செய்வது அவசியம்.
அந்தப் பரிசோதனையில், முட்டையின் அளவு குறித்து தெரிந்து கொள்ளலாம். பரிசோதனையில் முட்டையின் அளவு குறைவாக இருப்பதாக தெரியவந்தால், அதனை உறைய வைத்துக்('ப்ரீஜ்') கொள்ளலாம். பின்னர், குழந்தை பெற்றெடுக்க நினைக்கும்போது, ஐ.வி.எப். முறையின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
குழந்தை இல்லாமையை தடுக்க, வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம்?
சரியான உடற்பயிற்சி, நடைபயணம், சரிவிகித உணவு முறையைக் கடைப்பிடித்தல், 7 முதல் 8 மணி நேர உறக்கம், முறையான உடல் எடை பராமரிப்பு, 19 முதல் 24 வரையிலான பிஎம்ஐ போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். அதீத உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கக் கூடாது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
டாக்டர் அவந்தியை, 91600 50642 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.