/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவை தொகுதியில் 34 வேட்பாளர்களுக்கு 'டெபாசிட்' போச்சு! கோவை தொகுதியில் 34 வேட்பாளர்களுக்கு 'டெபாசிட்' போச்சு!
கோவை தொகுதியில் 34 வேட்பாளர்களுக்கு 'டெபாசிட்' போச்சு!
கோவை தொகுதியில் 34 வேட்பாளர்களுக்கு 'டெபாசிட்' போச்சு!
கோவை தொகுதியில் 34 வேட்பாளர்களுக்கு 'டெபாசிட்' போச்சு!
ADDED : ஜூன் 06, 2024 06:50 AM

கோவை : கோவை லோக்சபா தொகுதியில், தி.மு.க., - பா.ஜ., - அ.தி.மு.க., வேட்பாளர்களை தவிர, நாம் தமிழர் கட்சி உட்பட மீதமுள்ள, 34 வேட்பாளர்களும் 'டிபாசிட்' இழந்தனர்.
கோவை லோக்சபா தொகுதியில், 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம், 13 லட்சத்து, 73 ஆயிரத்து, 529 ஓட்டுகள் பதிவாகியிருந்தன. 696 தபால் ஓட்டுகள் செல்லாதவையாக இருந்தன.
போட்டியிட்ட வேட்பாளர்கள் எவரையும் தேர்ந்தெடுக்க விரும்பவில்லை என, 11 ஆயிரத்து, 788 ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அதனால், 13 லட்சத்து, 61 ஆயிரத்து, 045 ஓட்டுகள் செல்லத்தக்கவையாக, கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, 25 ஆயிரம் ரூபாய் 'டெபாசிட்' தொகை செலுத்துவர். பட்டியலினத்தை சேர்ந்தவர்கள், ரூ.12 ஆயிரத்து, 500 செலுத்துவர்.
பதிவான ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு ஓட்டு பெற்றால், 'டெபாசிட்' தொகை வேட்பாளர்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படும். இல்லையெனில், அரசு கஜானாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதன்படி கணக்கிட்டால், 'டெபாசிட்' தொகையை திரும்ப பெற, இரண்டு லட்சத்து, 26 ஆயிரத்து, 840 ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும்.
தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமார், பா.ஜ., அண்ணாமலை, அ.தி.மு.க., ராமச்சந்திரன் ஆகிய மூவர் மட்டுமே அதிகமான ஓட்டுகள் பெற்று, 'டெபாசிட்' தொகை திரும்ப பெறுகின்றனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி, 82 ஆயிரத்து, 657 ஓட்டுகளே பெற்றிருந்தார். அவருடன் சேர்த்து, 34 வேட்பாளர்களும் 'டெபாசிட்' இழந்திருக்கின்றனர்.
ஆச்சரியப்படுத்திய செல்லாத ஓட்டு
மொத்தம், 7,352 தபால் ஓட்டுகள் பெறப்பட்டு இருந்தன. அதிலும், 696 ஓட்டுகள் செல்லாதவையாக இருந்தன. முக்கிய வேட்பாளர்களுக்கு மட்டுமின்றி, சுயேட்சை வேட்பாளர்களுக்கும் தபால் ஓட்டுகள் பதிவாகி இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது.
ராஜ்குமார் என்கிற பெயரில் நான்கு சுயே., வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ராஜ்குமார் - 1,013, எம்.ராஜ்குமார் - 1,068, ஜி.பி.ராஜ்குமார் - 611, ஜி.ராஜ்குமார் - 892 ஓட்டு பெற்றிருந்தனர்.
இதேபோல், ராமச்சந்திரன் பெயரில் இரு சுயே., வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எம்.ராமச்சந்திரன் - 663, ஆர்.ராமச்சந்திரன் - 369 ஓட்டுகள் பெற்றிருக்கின்றனர்.
தி.மு.க., - பா.ஜ., - அ.தி.மு.க., - நாம் தமிழர் கட்சி தவிர மீதமுள்ள, 34 வேட்பாளர்களும் சேர்ந்து, 23 ஆயிரத்து, 566 ஓட்டுகள் பெற்றிருக்கின்றனர்.