கஞ்சாவுடன் வாலிபர் கைது
சித்தாபுதுார், ஹரிப்புரம் பட்டத்தரசி அம்மன் கோவில் பின்புறம், கஞ்சா விற்பனை நடப்பதாக காட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அதே பகுதியை சேர்ந்த விசாலிடம்(20), 250 கிராம் கஞ்சா மற்றும் ஒரு மொபைல் போனை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பஸ் மோதி வாலிபர் பலி
சிங்காநல்லுாரில் இருந்து காந்திபுரம் செல்லும், 140 வழித்தட எண் கொண்ட அரசு பஸ்சை விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்த தினேஷ் பாபு என்பவர், நேற்று முன்தினம் இயக்கினார். சிங்காநல்லுார் - ஹோப்ஸ் செல்லும் காமராஜர் ரோட்டில், தனியார் பெண்கள் தங்கும் விடுதி எதிரே நள்ளிரவு, 2:20 மணியளவில் சென்றபோது எதிரே பைக்கில் வந்த பொள்ளாச்சி, பெத்தநாயக்கனுாரை சேர்ந்த பரத், 21 மீது பஸ் மோதியது. படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
மது பாட்டில்கள் பறிமுதல்
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்காக, 'டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவை விமான நிலையம் பின்புறம் பூட்டப்பட்ட'டாஸ்மாக்' மதுக்கடை அருகே, நேற்று முன்தினம் இரவு சட்ட விரோதமாக சரக்கு விற்பனை நடப்பதாக, பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சகோதரர்கள் 'எஸ்கேப்'
பேரூர் மெயின் ரோடு, துர்கா காலனியை சேர்ந்த ரவிசங்கர் பெரியகடை வீதியில் நகைக்கடை நடத்திவருகிறார். இவர் தெலுங்கு வீதியில் நகை பட்டறை வைத்துள்ள சகோதரர்கள் நாகராஜ் மற்றும் பிரபு ஆகியோரிடம், தங்க பிஸ்கட்கள் வழங்கி ஆபரணங்கள் தயாரித்து பெற்றுவந்துள்ளார். ஆபரண தயாரிப்புக்காக, 47 சவரன் எடையுள்ள தங்க பிஸ்கட்டை, இருவரிடமும் ரவிசங்கர் வழங்கியுள்ளார். ஆனால், ஆபரணம் தயாரித்து வழங்காமல் இழுத்தடித்ததை அடுத்து, ரவிசங்கர் பெரியகடை வீதி போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான இருவரையும் தேடிவருகின்றனர்.
வாலிபரிடம் மொபைல்போன் பறிப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் கீழூரை சேர்ந்த உமந்த் மகன் சுஜின், 20. டீ மாஸ்டர். சூலூரில் தங்கி அருகில் உள்ள கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார். நேற்று முன் தினம் இரவு, வேலை முடிந்து அறைக்கு திரும்பினார். அப்போது, இரு பைக்குகளில் வந்த நான்கு பேர், சுஜினை மிரட்டி, பணம் கேட்டுள்ளனர். பணம் இல்லை எனக்கூறியவரை மிரட்டிய அந்நபர்கள், போனை பறித்து அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து சுஜின் அளித்த புகாரின் பேரில், சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பேட்டரி திருடிய சிறுவர்கள் கைது
சுண்டபாளையம், சின்ன நந்தவன தோட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார்,49; விவசாயி. இவர் தனது தோட்டத்தை சுற்றி, சோலார் மின்வேலி அமைத்துள்ளார். இந்த சோலார் மின்வேலிக்கான பேட்டரி இணைப்பை, தோட்டத்தில் உள்ள வீட்டின் பின்புறம் வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை, சிவக்குமார், வீட்டிற்குள் இருந்த போது, வீட்டின் பின்புறம் சத்தம் கேட்டுள்ளது. சிவக்குமார் சென்று பார்த்தபோது, இருவர் பேட்டரியை திருட முயன்று கொண்டிருந்தனர். திருட்டில் ஈடுபட்ட, 17 வயதுடைய இரண்டு சிறுவர்களையும், கையும், களவுமாக பிடித்த சிவக்குமார், அவர்களை வடவள்ளி போலீசில் ஒப்படைத்தார். வடவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, இரண்டு சிறுவர்களையும் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.