ரூ.1.90 லட்சம் திருட்டு
ரத்தினபுரி, மாதவன் வீதியை சேர்ந்தவர் மீனா,47. நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு பணிக்காக வெளியே சென்றார். மதியம், 1:00 மணிக்கு வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த ரூ.1.90 லட்சம் திருட்டுபோனது தெரியவந்தது. ரத்தினபுரி போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்து திருடர்களை தேடுகின்றனர்.
1.5 சவரன் நகை 'அபேஸ்'
ஆர்.எஸ்.புரம் அருகே காமராஜபுரத்தை சேர்ந்தவர் செல்வி,40. இவர் ஜி.பி. தியேட்டர் அருகே தனியார் பஸ்சில் ஏறி, சிந்தாமணி பஸ் ஸ்டாப்பில் இறங்கியுள்ளார். அப்போது, அவரது கழுத்தில் இருந்த, 1.5 சவரன் தங்க நகை காணாமல் போனது. புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ்.புரம் போலீசார் பஸ்சில் பொருத்தப்பட்ட 'சிசிடிவி' கேமரா பதிவுகளை, ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
போலி ஐ.டி.,யில் அழைப்பு
கோவைப்புதுார், தோட்டராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் யோவன் சாமுவேல்,40. இவரது மகள் ஜெர்சியாவும், ஜெபக்குமார் என்பவரது மகள் கிறிஸ்டினாவும் தோழிகள். யோவன் சாமுவேலிடம் இரவு நேரத்தில் போலி ஐ.டி., கொண்ட இன்ஸ்டாகிராமில், தனது புகைப்படத்தை பயன்படுத்தி கிறிஸ்டினா வீடியோ அழைப்புகள் செய்வதாக, ஜெர்சியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, யோவன் சாமுவேல் கேட்டபோது ஜெபக்குமார் தகாத வார்த்தைகள் பேசியதுடன், தாக்கியும் உள்ளார். புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மது போதையில் தகராறு
கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் தனசேகரன்,46 மற்றும் சேகர்,46 ஆகியோர் குடிபோதையில் அருகேயுள்ள பழைய தோட்டம் ஹவுசிங் யூனிட் பகுதியில், தகராறு செய்துகொண்டிருந்தனர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதை அடுத்து, பழைய தோட்டம் பகுதியை சேர்ந்த பூமிகா அளித்த புகாரின் பேரில், பெரியகடை வீதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.