/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குழந்தை தொழிலாளர்கள் அதிகாரிகள் தீவிர சோதனை குழந்தை தொழிலாளர்கள் அதிகாரிகள் தீவிர சோதனை
குழந்தை தொழிலாளர்கள் அதிகாரிகள் தீவிர சோதனை
குழந்தை தொழிலாளர்கள் அதிகாரிகள் தீவிர சோதனை
குழந்தை தொழிலாளர்கள் அதிகாரிகள் தீவிர சோதனை
ADDED : ஜூன் 07, 2024 11:26 PM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் உள்ள கடைகள், தொழில்நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனரா என தொழிலாளர் துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அனைத்து நிறுவனங்களிலும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்த வித பணியிலும் ஈடுபடுத்தகூடாது. 15 முதல் 18 வயதிற்குட்டபட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது.
வளரிளம் பருவத்தினரை அபாயமற்ற பணிகளில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் தொழிலாளர் துறைக்கு உரிய அறிவிப்பு படிவம் அளித்திட வேண்டும். குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்தும் நிறுவனங்கள் மீது குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து, அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் மற்றும் 2 வருட சிறை தண்டனை விதிக்கப்படும்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அண்மையில் கோவை மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) தெரிவித்திருந்தார்.
இதன்படி, மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், தொழில்நிறுவனங்கள் போன்ற பல்வேறு இடங்களில் தொழிலாளர் துறை மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம், தொழிலாளர் உதவி ஆய்வாளர் சத்யா கூறுகையில், ''குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனரா என அனைத்து இடங்களிலும் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றோம்.
குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்தக்கூடாது என கடையின் உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இம்மாதம் முழுவதும் தொடர் சோதனை நடைபெறும். குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை நடைபெற்ற சோதனையில் குழந்தை தொழிலாளர்கள் யாரும் கண்டறியப்படவில்லை,'' என்றார்.