/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கான்ட்ராக்டர்களாக மாறிய 'ஹைவேஸ்' அதிகாரிகள் மாற்றம்! * 'தினமலர்' செய்தி எதிரொலி கான்ட்ராக்டர்களாக மாறிய 'ஹைவேஸ்' அதிகாரிகள் மாற்றம்! * 'தினமலர்' செய்தி எதிரொலி
கான்ட்ராக்டர்களாக மாறிய 'ஹைவேஸ்' அதிகாரிகள் மாற்றம்! * 'தினமலர்' செய்தி எதிரொலி
கான்ட்ராக்டர்களாக மாறிய 'ஹைவேஸ்' அதிகாரிகள் மாற்றம்! * 'தினமலர்' செய்தி எதிரொலி
கான்ட்ராக்டர்களாக மாறிய 'ஹைவேஸ்' அதிகாரிகள் மாற்றம்! * 'தினமலர்' செய்தி எதிரொலி
ADDED : ஜூலை 02, 2024 11:22 PM
-நமது சிறப்பு நிருபர்-
கான்ட்ராக்டர்கள் பெயர்களில் ஒப்பந்தப்பணிகளை எடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளே ரோடு வேலைகளைச் செய்வது குறித்து, நமது நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, கோவையில் அத்துறையின் இன்ஜினியர்கள், கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 90 சதவீதப் பணிகளை, கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவு மேற்கொள்கிறது. புதிதாக ரோடு அமைப்பது, ரோடு சீரமைப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்யும் இந்தப் பிரிவுக்கே, துறைக்கான மொத்த நிதியில் பெருமளவு நிதி ஒதுக்கப்படுகிறது.
இதில் ரோடு சீரமைப்புப் பணிகளில், பெருமளவில் முறைகேடு நடந்து வருகிறது. சீரமைப்பு என்ற பெயரில், பணிகளை தரமின்றியும், பணியே செய்யாமலும் பணத்தை எடுத்து முறைகேடு செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஒரே ரோட்டில் நடக்கும் சீரமைப்புப் பணியை, ரூ.15 லட்சத்துக்கும் குறைவான மதிப்பீட்டில், சின்னச்சின்னப் பணியாகப் பிரித்து வழங்கி, முறைகேடு நடக்கிறது.
தரமற்ற பணிகள்
கோட்டப் பொறியாளரே, இந்த தொகையுள்ள பணிக்கு இ-டெண்டர் விட்டு, பணியை இறுதி செய்யலாம் என்பதால், ஒரு கோடி ரூபாய் பணியும் ஆறேழு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. இதனால் தரமான நிறுவனங்கள், இந்த டெண்டர்களில் பங்கேற்பதில்லை. மாறாக, சின்னச்சின்ன கான்ட்ராக்டர்கள் பணிகளை எடுத்து, தரமற்ற முறையில் செய்கின்றனர்.
இதனால்தான், ரோடு சீரமைக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே கந்தலாகி விடுகிறது. இதிலும் கோவையில் நுாதன முறைகேடு அரங்கேறியது. ரூ.15 லட்சத்துக்கும் குறைவான மதிப்பிலான பல பணிகளை, கான்ட்ராக்டர்கள் பெயர்களில் துறை இன்ஜினியர்கள் சிலரே, எடுத்துச் செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.
துறையின் மேலிடத்துக்கு 30 சதவீதத் தொகையையும், சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டருக்கு 10 சதவீதத் தொகையையும் கொடுத்து விட்டு, மீதியுள்ள தொகையில் பணிகளை இவர்களே செய்துள்ளனர். அதிலும் பல இடங்களில், ரோடுகளைச் சீரமைக்காமலே, தொகையை எடுத்துக் கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.
தினமலர் நாளிதழில் செய்தி
துறையின் செயலருக்கு, கான்ட்ராக்டர்கள் சங்கம் சார்பில் புகார் அனுப்பப்பட்டது. இதுகுறித்து, நமது நாளிதழில், 'கான்ட்ராக்டர்களாக மாறிய ஹைவேஸ் அதிகாரிகள்' என்ற தலைப்பில், ஜூன் 2 அன்று விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, இந்த முறைகேடு பற்றி விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. கோவையில் இக்குழு கள ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டது. விசாரணை அறிக்கை, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவின் கோவை கோட்டப் பொறியாளர் உட்பட, அனைத்து இன்ஜினியர்களும் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை வடக்கு, கோவை தெற்கு, அன்னுார், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் சிறப்பு திட்டப்பிரிவு ஆகிய உதவி கோட்டப் பொறியாளர்கள், இவர்களின் கீழ் பணியாற்றி வந்த ஏழு உதவிப் பொறியாளர்கள் உள்ளிட்ட, அனைவருக்கும் இடமாறுதல் உத்தரவு வந்துள்ளது.
உக்கடம் மேம்பாலம், மேற்கு புறவழிச்சாலைப்பணிகளை மேற்கொண்ட இன்ஜினியர்களையும் மாற்றியிருப்பது, இந்தப் பணிகளை மேலும் தொய்வடையச் செய்ய வாய்ப்புள்ளது.