Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குடியிருப்புகளில் கொள்ளை விவகாரம் மூளையாக செயல்பட்ட 'ராடுமேன்' கைது கொள்ளையடித்த பணத்தில் மில் வாங்கியது அம்பலம்

குடியிருப்புகளில் கொள்ளை விவகாரம் மூளையாக செயல்பட்ட 'ராடுமேன்' கைது கொள்ளையடித்த பணத்தில் மில் வாங்கியது அம்பலம்

குடியிருப்புகளில் கொள்ளை விவகாரம் மூளையாக செயல்பட்ட 'ராடுமேன்' கைது கொள்ளையடித்த பணத்தில் மில் வாங்கியது அம்பலம்

குடியிருப்புகளில் கொள்ளை விவகாரம் மூளையாக செயல்பட்ட 'ராடுமேன்' கைது கொள்ளையடித்த பணத்தில் மில் வாங்கியது அம்பலம்

ADDED : ஜூலை 10, 2024 10:45 PM


Google News
Latest Tamil News
கோவை:ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய குடியிருப்புகளில் நடந்த கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டவரை, தனிப்படை போலீசார் கோவையில் கைது செய்தனர்.

கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர்(வடக்கு) ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ரயிவே தண்டவாளங்களை ஒட்டிய குடியிருப்புகளை குறிவைத்து, 2020ம் ஆண்டு முதல் தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்தது. கோவையில், 18 உட்பட மாநிலத்தில், 68க்கும் மேற்பட்ட சம்பவங்கள் தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவை மாநகர போலீசார் அடங்கிய தனிப்படை கடந்த மூன்று மாதங்களாக தீவிர விசாரணை நடத்தியது. கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த மூர்த்தியை, 36, கோவையில் இத்தனிப்படையினர் கைது செய்துள்ளனர். இவரது கூட்டாளி அம்சராஜனும், 26, கைது செய்யப்பட்டுள்ளார்.

இது, 'ராடுமேன் ஸ்டைல்'


தண்டவாளத்தில் நடந்துசெல்லும் 'ராடு மேன்' எனப்படும் மூர்த்தி, யாரும் இல்லாத, ஆட்கள் குறைவாக இருக்கும் வீடுகளில், பெரும்பாலும் தனியாகவே சென்று இரும்பு ராடு கொண்டு, கதவை உடைத்து குற்றசம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

சில சமயங்களில் கூட்டாக சேர்ந்தும் ஈடுபடுவார். இக்கும்பலில், மூர்த்தியின் உறவினர்கள் உட்பட ஏழு பேர் உள்ளனர்; வேறு யாரையும் இவர்கள் கூட்டு சேர்ப்பதில்லை. கோவையில், 376 சவரன் தங்க நகை உட்பட மாநிலத்தில், 1,500 சவரன் நகையையும், ரூ.1.76 கோடி ரொக்கத்தையும் திருடியுள்ளனர்.

வீட்டில் இருப்பவர்களை கட்டிப்போட்டு, குற்றசம்பவத்தில் ஈடுபடும் இவர்கள், வெவ்வேறு மொழிகளில் பேசி குழப்பியுள்ளனர். எப்போதும், முகமூடியும், முழுக்கை சட்டை மட்டுமே மூர்த்தி அணிந்துசெல்வார். கோவையில் சிங்காநல்லுார், பீளமேடு, துடியலுார் பகுதிகளில் அதிக சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மில் வாங்கிய கொள்ளையன்


கொள்ளை நகையை உருக்கி விற்று, ராஜபாளையத்தில் ரூ.4.5 கோடி மதிப்பில் 'ஸ்பின்னிங் மில்', பஸ் ஸ்டாண்ட் அருகே, 53 சென்ட் இடமும் மூர்த்தி வாங்கியுள்ளார். 63 சவரன் நகை, இரு கார்கள், விலை உயர்ந்த ஆறு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு சம்பவங்களில் கிடைத்த அறிவியல் தடயங்களை வைத்து, இவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ராஜபாளையத்தில் மூர்த்தியின் மனைவியும், அவரது தம்பியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலரை தேடிவருகிறோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us