/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் 'மோதல்' மாநகராட்சி கூட்டத்தில் 333 தீர்மானங்கள் 'ஆல்-பாஸ்' அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் 'மோதல்' மாநகராட்சி கூட்டத்தில் 333 தீர்மானங்கள் 'ஆல்-பாஸ்'
அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் 'மோதல்' மாநகராட்சி கூட்டத்தில் 333 தீர்மானங்கள் 'ஆல்-பாஸ்'
அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் 'மோதல்' மாநகராட்சி கூட்டத்தில் 333 தீர்மானங்கள் 'ஆல்-பாஸ்'
அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் 'மோதல்' மாநகராட்சி கூட்டத்தில் 333 தீர்மானங்கள் 'ஆல்-பாஸ்'
ADDED : ஜூலை 26, 2024 10:57 PM

கோவை:'ஆல் பாஸ்' முறையில், கோவை மாநகராட்சியில், 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க., மாமன்ற குழு தலைவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால், தி.மு.க., கவுன்சிலர்கள், அவரை சூழ்ந்து நின்று வாக்குவாதம் செய்தனர். மன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சியில் மூன்று மாதங்களுக்குப் பின், நேற்று மாமன்ற கூட்டம் நடத்தப்பட்டது. மேயர் பதவியை, 19வது வார்டு கவுன்சிலர் (தி.மு.க.,) கல்பனா, ராஜினாமா செய்ததால், துணை மேயர் வெற்றிச்செல்வன் தலைமை தாங்கினார்.
வழக்கமாக, ஒவ்வொரு தீர்மானமாக படித்து, அனுமதிக்கலாம் என கூறி, பின்னர் நிறைவேற்றப்படும். நேற்று, 'ஆல் பாஸ்' முறையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு, அ.தி.மு.க., மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், ''மொத்தம், 333 தீர்மானங்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவற்றை படித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. ஊழல், முறைகேடு நடந்திருக்கிறது,'' என்றார்.
அவரை பேச விடாமல், தி.மு.க., கவுன்சிலர்கள் சூழ்ந்து நின்று கொண்டு, வாக்குவாதம் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின், பிரபாகரன் பேசுகையில், ''கட்டட வரைபட அனுமதி வழங்க, ஆன்-லைன் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதில், மறைமுகமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன், சதுரடிக்கு, 44 ரூபாயாக இருந்த கட்டணம், இப்போது 88 ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.
மன்ற கூட்டம் முடிந்ததும், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு 'ஆன்லைன்' முறையில் அனுமதி தரும் திட்டம் சமீபத்தில் துவக்கப்பட்டது. இது, இலவசம் என மக்கள் நினைத்தனர். இதற்கு முன் வரைபட அனுமதி பெற, 40 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது; இப்போது, 3 லட்சம் ரூபாய் செலுத்தச் சொல்கின்றனர். மக்கள் மீது அக்கறையில்லாமல் அரசு செயல்படுகிறது.
கடன் பத்திரம் வெளியிடுவதாக கூறியுள்ளனர். மாநகராட்சி திவாலாகி இருக்கிறதா; மத்திய, மாநில அரசுகள் நிதி தருவதில்லையா. தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், கோவை மக்கள் துன்பம் அனுபவிக்கின்றனர்,'' என்றார்.
முன்னதாக, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ், ஷர்மிளா ஆகிய மூவரும், விக்டோரியா ஹால் முன் தரையில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.