
வாசிப்பை நேசித்தது எப்போது?
பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த போது, கும்பகோணத்தில் உள்ள சிவகுருநாதன் நுாலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு யாரோ படித்து விட்டு, மேசை மீது விரித்தே விட்டுச் சென்ற புத்தகத்தை படித்தேன். 'நான் இருக்கிறேன்' என்ற ஜெயகாந்தனின் சிறுகதை அது.
நீங்கள் வாசித்த ஆரம்பகால எழுத்தாளர்கள் பற்றி?
கண்ணதாசன், வண்ணதாசன் எழுத்துகளுடன் சுத்தரராமசாமியின் ஜெ.ஜெ.சில குறிப்புகள் நுால் என்னை வசீகரித்தது. எம்.வி.வெங்கட்ராமன் எங்கள் ஊர்க்காரர் என்பதால், 'காதுகள்' நாவலை கையெழுத்து பிரதியாகவே படித்தேன். கரிச்சான்குஞ்சு, ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்த 'இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்' எனும் நுாலை, அவர் சொல்லச் சொல்ல எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
திரைத்துறை பிரவேசம் எப்படி?
என் உறவினர் வழிகாட்டுதலால், பி.எஸ்., இயற்பியல் படித்தேன். அது என்னை கவராததால், எம்.ஏ., தமிழ் படித்ததும், இயக்குனராகும் கனவுடன் சென்னை வந்தேன். 'பேசும்படம், பிலிமாலயா' இதழ்களுக்காக திரைக்கலைஞர்களிடம் பேட்டி எடுத்து எழுதினேன்.
இயக்குனரானது பற்றி?
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜீவா நடிக்க, தித்திக்குதே திரைப்படத்தை இயக்கினேன். சில பட வாய்ப்புகள் வந்து சென்றன. தற்போது ஜீவா, மாதவன் நடக்கும் படங்களை இயக்க உள்ளேன். இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளேன்.
சினிமாவில் கால் வைத்துக்கொண்டே கவிதைகளில் கை வைக்கிறீர்களே?
எழுத்து தான் எனக்கு எல்லாம். சினிமா என் பிழைப்புக்கான வழி. அதில், நான் வசனகர்த்தா மட்டுமே. ஆனால், நான் எழுதும் கவிதைகள் எனக்கானவை. சமூகம் சார்ந்த என் உணர்ச்சியில் பிறப்பவை.