ADDED : ஜன 05, 2024 12:30 AM

திருநீர்மலை,
பல்லாவரம் அடுத்த திருநீர்மலை, கிழக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்; பெட்டி கடை வைத்துள்ளார். இவரது மனைவி அகிலா, 43.
நேற்று காலை தம்பதி, கடையை திறக்க அவ்வழியே நடந்து சென்றனர்.
அப்போது, தறிகெட்டு அதிவேகமாக வந்த 'ஹூண்டாய் கிரிட்டா' கார், அங்கிருந்த ஒரு வீட்டு சுற்றுச்சுவர் மற்றும் அகிலா மீது பயங்கரமாக மோதியது.
இதில் அகிலா துாக்கி வீசப்பட்டு, கணவர் கண்ணெதிரே உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய கார், பள்ளத்தில் சிக்கியது.
கார் ஓட்டுனரை அங்கிருந்தோர் பிடித்து, தர்ம அடி கொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், திருநீர்மலையைச் சேர்ந்த அஜ்மல், 22, என்பதும், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படிப்பது தெரிந்தது. குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.