Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/வசூல் பூங்காவாக மாறிய வண்டலுார் உயிரியல் பூங்கா :பார்வையாளர்கள் அதிருப்தி

வசூல் பூங்காவாக மாறிய வண்டலுார் உயிரியல் பூங்கா :பார்வையாளர்கள் அதிருப்தி

வசூல் பூங்காவாக மாறிய வண்டலுார் உயிரியல் பூங்கா :பார்வையாளர்கள் அதிருப்தி

வசூல் பூங்காவாக மாறிய வண்டலுார் உயிரியல் பூங்கா :பார்வையாளர்கள் அதிருப்தி

UPDATED : மே 25, 2025 07:56 AMADDED : மே 24, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
சென்னை: வண்டலுார் உயிரியல் பூங்காவை முறையாக பராமரிக்காமல், அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் பார்வையாளர்களிடம் பணம் பறிப்பதில் மட்டுமே வனத்துறை ஆர்வம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்காவான, வண்டலுார் உயிரியல் பூங்கா, 1,490 ஏக்கர் பரப்பளவு உடையது. பாலுாட்டிகள், ஊர்வன, பறவை, ஊன் உண்ணிகள் என, எட்டு வகையிலான, 2,400 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

வார நாட்களில், 2,500 முதல் 3,000 வரையிலும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 7,500 முதல் 9,000 வரை பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

மான்கள் மற்றும் சிங்கங்களை அவற்றின் உலவும் பகுதியிலேயே பார்வையிடுவதற்கு, 'சபாரி' உள்ளது. வெவ்வேறு இடங்களில் உள்ள விலங்குகள், பறவைகள் காட்சிக்கூடத்தை காண பேட்டரி கார் வசதியும் உள்ளது. பார்வையாளர்கள் வசதிக்காக, ஏழு பரிமாண காட்சி கூடமும் திறக்கப்பட்டுள்ளது.

நடுத்தர மற்றும் ஏழை மக்களின் சிறந்த பொழுது போக்கு இடமாக, இப்பூங்கா திகழ்வதால், இந்த கோடை விடுமுறையில் ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கானோர், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து வருகின்றனர்.

அவ்வாறு வருவோரிடம், பணம் வசூலில் மட்டும் குறியாக இருக்கும் வனத்துறை, பூர்வா நிர்வாகம், அவர்களுக்கான வசதிகளை முறையாக செய்வதில்லை என புகார் எழுந்துள்ளது.

பூங்கா கழிப்பறைகளில் கடும் துர்நாற்றம் வீசுவதால், உள்ளே செல்லவே தயக்கமாக உள்ளது. போதிய அளவில் குடிநீர் வசதிகளும் இல்லை என, பார்வையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து, மேலும் அவர்கள் கூறியதாவது:

பூங்காவில் போதிய குடிநீர் வசதியும் செய்யப்படாமல் உள்ளது. ஆங்காங்கே தண்ணீரின்றி தொட்டிகள் மட்டுமே உள்ளன. தண்ணீர் வரும் இடங்களில் அதை பிடிக்க கூட்டம் அலைமோதுகிறது.

மின்தடை ஏற்படும்போது கழிப்பறைகளில் தண்ணீர் வராததால், அவசரத்திற்கு ஒதுங்குவோர் அவதிக்குள்ளாகின்றனர். தவிர, கழிப்பறைகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

பூங்காவில் சிங்கம் உலவும் இடத்திற்கு பெரியவர்களுக்கு 150 ரூபாயும், சிறியவர்களுக்கு 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வாகனம் செல்வதற்கு சரியான பாதைகள் அமைக்கவில்லை. செல்லும் வழிகளில், புயல் காற்றில் சேதமடைந்த மரங்களும், மூங்கில் புதர்களும் மண்டி கிடக்கின்றன. அவற்றை அகற்றி புதிதாக மரக்கன்றுகளை நட, வனத்துறை எடுக்கவில்லை.

பூங்கா சுற்றுச்சுவருக்கு மேல் உள்ள முள்வேலி, ஆங்காங்கே துருபிடித்து விழுந்து கிடக்கின்றன. சிங்கங்கள் ஓய்வெடுப்பதற்காக, பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிசைகளின் கூரை சேதமடைந்துள்ளது. இதனால் சிங்கங்கள், கிடைத்த இடத்தில் படுத்து கிடக்கின்றன.

கட்டணம் செலுத்தி வாகனத்தில் சென்று பார்ப்பதற்கும் நடந்து சென்று பார்ப்பதற்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. ஆனால், லயன் சபாரி என்ற பெயரில் பணம் பறிக்கப்படுகிறது.

காலை மற்றும் மாலை உணவை தவிர, விலங்குகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் எந்த வேலையிலும் வனத்துறை ஆர்வம் காட்டவில்லை. வன விலங்குகளை வைத்து சம்பாதிக்கும் வனத்துறை, அவற்றை கண்டுகொள்வதில்லை.

முதலை, காண்டாமிருகம், யானை, கரடி, நெருப்பு கோழி, கருங்குரங்கு மட்டுமே காட்சி கொடுக்கின்றன. பூங்காவில் அரிய வகை பறவை இனங்களும் இல்லை. ஏற்கனவே இருந்த பல கோழியினங்கள் மறைந்துவிட்டதாக பூங்கா ஊழியர்கள் சொல்கின்றனர்.

பூங்காவை முழுமையாக சுற்றிபார்த்து ஏமாறுபவர்கள், புகார் தெரிவிக்க வசதிகளும் செய்யப்படவில்லை. முழுமையாக இழுத்து மூட வேண்டிய பூங்கா, வனத்துறை வசூலுக்காகவே இயங்கி வருகிறது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், ஒருமுறை முழுமையாக பூங்காவை வலம்வந்தால் அங்கு பார்வையாளர்கள் ஏமாற்றப்படுவதை முழுமையாக உணர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விமோசனம் கிடைக்கவில்லை

பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளின் உணவு செலவுக்கு 6 கோடி வரையும், ஊழியர்களின் சம்பளத்திற்கு 7 கோடி ரூபாயும் செலவிடப்படுகிறது. பூங்காவிற்கு வரும் வருமானம் முழுதும், இதற்கே செலவிடப்படுகிறது. இதனால், கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. பூங்கா புனரமைப்பிற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படுகிறது. அதை ஒதுக்கி முறையாக பணிகளை செய்தால், உலக தரத்திற்கு பூங்காவை மாற்றலாம். வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து பறவைகள், விலங்குகளை பரிமாற்ற முறையிலும், விலை கொடுத்தும் வாங்கலாம். மூன்று அமைச்சர்கள் மாறியும், இந்த பூங்காவிற்கு விமோசனம் கிடைக்கவில்லை.

- வனத்துறை அதிகாரி ஒருவர்

பூங்காவில் நிலவும் பிரச்னைகள்

1. ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல் நிலவுவதால், திறந்திருக்கும் இரண்டு நேரடி கவுன்டர், குவியும் பார்வையாளர்களுக்கு போதுமானதாக இல்லை.2. வீட்டில் இருந்து எடுத்து செல்லும் பைகளை வாங்கி வைத்துவிடுவதால், பூங்கா வளாக சுற்றுலா துறை உணவகங்களில் சாப்பாடு நிலை ஏற்படுகிறது. விலை அதிகமாக இருப்பதோடு, சாப்பாடும் மோசமாக இருக்கிறது. இதை சாப்பிடுவதால், பலருக்கு வயிறு உபாதை ஏற்படுகிறது. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கூட 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 3. பூங்கா காட்சிக்கூடங்களுக்கு, நான்கு முதல் ஐந்து இடங்கள் வரை, பேட்டரி வாகனங்களில் மாறி மாறி பயணிக்க வேண்டியுள்ளது. இவற்றை இயக்கும் ஓட்டுநர்கள், பார்வையாளர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வதில்லை. தங்கள் இஷ்டத்திற்கு ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி பார்வையாளர்களை அலைக்கழிக்கின்றனர்.4. பாம்பு காட்சி கூடம் பாழடைந்து கிடக்கிறது. மீன் கூடத்தில், வீட்டில் வளர்க்கும் மீன்களை மட்டுமே காண முடிகிறது. சில காட்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us