/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கூவம் ஆற்றில் அகற்றாத கட்டட கழிவுகளால்... மீண்டும் ஆபத்து?: தேசிய ஆணையமும், மாநகராட்சியும் அலட்சியம் கூவம் ஆற்றில் அகற்றாத கட்டட கழிவுகளால்... மீண்டும் ஆபத்து?: தேசிய ஆணையமும், மாநகராட்சியும் அலட்சியம்
கூவம் ஆற்றில் அகற்றாத கட்டட கழிவுகளால்... மீண்டும் ஆபத்து?: தேசிய ஆணையமும், மாநகராட்சியும் அலட்சியம்
கூவம் ஆற்றில் அகற்றாத கட்டட கழிவுகளால்... மீண்டும் ஆபத்து?: தேசிய ஆணையமும், மாநகராட்சியும் அலட்சியம்
கூவம் ஆற்றில் அகற்றாத கட்டட கழிவுகளால்... மீண்டும் ஆபத்து?: தேசிய ஆணையமும், மாநகராட்சியும் அலட்சியம்
ADDED : செப் 22, 2025 03:26 AM

சென்னை: தமிழக அரசு இரண்டு முறை கடிதம் அனுப்பியும், கூவத்தில் இரண்டடுக்கு மேம்பாலத்திற்கான குவிக்கப்பட்ட கட்டமைப்புக்களையும், கட்டட கழிவுகளையும் அகற்றாமல், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால், வடகிழக்கு பருவ மழையின்போது, கடந்த ஆண்டுபோல நீரோட்டம் பாதித்து, சென்னை மக்கள் வெள்ளத்தில் பரிதவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் துவங்கும் கூவம் ஆறு, திருவேற்காடு வழியாக சென்னைக்கு நுழைந்து மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம், அமைந்தகரை, சேத்துப்பட்டு, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை வழியாக நேப்பியர் பாலத்தை கடந்து வங்க கடலில் கலக்கிறது.
சென்னையின் கழிவுநீர் வெளியேற்றும் கட்டமைப்பாக மட்டுமின்றி, வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளநீரை வெளியேற்றுவதில் கூவம் ஆறு முக்கிய பங்கு வகிக்கிறது.
இதன்வாயிலாக, வினாடிக்கு 22,000 கன அடி நீரை முகத்துவாரம் வழியாக வெளியேற்ற முடியும். வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது. அதற்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளது.
முன்கூட்டியே பருவமழை துவங்குவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், கூவம் நீரோட்டத்தை தடுக்கும் வகையில், பல இடங்களில் அடைப்புகள் உருவாகியுள்ளன.
மேம்பால சாலை இந்நிலையில், சென்னைத் துறைமுகத்திற்கு வந்து செல்லும் கனரக வாகனங்களால், சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால், விபத்துக்களும் அதிகரித்து வருவதால், சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே, 5,965 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டடுக்கு மேம்பால சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது, கோயம்பேடு முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை, கூவம் ஆற்றின் மத்தியிலும், கரையிலும் துாண்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.
இதற்காக, கூவத்தில் ஆ ங்காங்கே கட்டட இடிபாடுகள், இரும்பு கம்பிகள், கட்டுமான தளவாடங்கள், ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளன. இதனால், வடகிழக்கு பருவமழை வெள்ளிநீர் வெளியேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
கடந்தாண்டு, இதேபோன்ற நிலை ஏற்பட்டது. அப்போது, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டது.
சென்னை மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறைக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, கட்டட இடிபாடுகள் கூவத்தில் இருந்து அதிரடியாக அகற்றப்பட்டன.
ஆனால், தற்போது எந்த கவலையும் இல்லாமல், கட்டுமான நிறுவனம் அலட்சியமாக கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கட்டட இடிபாடுகள் டன் கணக்கில் குவிந்துள்ளன.
பருவமழையால் பாதிப்பு இதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை மாநகராட்சி நிர்வாகம், நீர்வளத்துறை ஆகியவை கண்டுகொள்ளாமல் உள்ளன.
இதனால், வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்க்கும் பட்சத்தில், சென்னை மக்கள் வெள்ள பாதிப்பில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மண்டல நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டட இடிபாடுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் அகற்ற வேண்டும் என இரண்டு முறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
ஆனால், துாண்கள் அமைக்கும் பணியை விரைவுப்படுத்தி உள்ளதாக கூறி, கட்டட இடிபாடுகளை அகற்றாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். பருவமழை நடப்பாண்டு, குறைவாகவே பெய்யும் என்றும் சொல்கின்றனர்.
சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஏற்கனவே பாதிப்பு அபாயம் குறித்து அறிவுறுத்தியும், ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. சென்னையில் சில நீர்வழித்தடங்களை ஒப்படைத்தது போன்று கூவத்தையும் எங்களிடம் ஒப்படைத்து விடுங்ங்கள் என்று கேட்கின்றனர்.
இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் அவகாசம் இருப்பதால், அதற்குள் கட்டுமான பொருட்களையும், தளவாடங்களையும், கட்டட கழிவுகளையும் அகற்றிவிடுவார்கள் என நம்புகிறோம். அலட்சியம் காட்டினால் சென்னைக்கு ஆபத்துதான்.
இவ்வாறு அவர் கூறினார்.