திருநங்கை கொலை போலீஸ் வாகனம் உடைப்பு
திருநங்கை கொலை போலீஸ் வாகனம் உடைப்பு
திருநங்கை கொலை போலீஸ் வாகனம் உடைப்பு
ADDED : ஜன 29, 2024 01:34 AM
செம்மஞ்சேரி:பெரும்பாக்கம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சிம்மி, 21; திருநங்கை. இவர், நான்கு நாட்களாக காணவில்லை என்பதால் உறவினர்கள், பெரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று மாலை, செம்மஞ்சேரி, பழத்தோட்ட சாலையில் உள்ள ஒரு காலி இடத்தில், சிம்மி தலை நசுங்கிய நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
செம்மஞ்சேரி போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவம் தொடர்பாக, நேற்று இரவு இரண்டு திருநங்கையர் உள்ளிட்ட ஐந்து பேரை பிடித்து, காவல் உதவி மையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அங்கு திருநங்கையர், உறவினர்கள் கூடினர். உடனே, விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என்பதை உணர்ந்த போலீசார், வேறு இடத்தில் வைத்து விசாரிக்க, ஐந்து பேரையும் வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதாக நினைத்த மக்கள், போலீஸ் வாகனத்தை கல்வீசி தாக்கி, அங்கிருந்த இருக்கைகளை உடைத்தனர்.
காவல் உதவி மையத்தில் இருந்த நான்கு போலீசாரால், அவர்களை சமாளிக்க முடியவில்லை.
சில நிமிடங்களில், ரோந்து பணியில் இருந்த போலீசார் அங்கு சென்று, அனைவரையும் சமாதானம் செய்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.