/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரூ.100 கோடி சொத்து இருந்தும் வீண் பொலிவிழந்தது பனச்சியம்மன் கோவில்ரூ.100 கோடி சொத்து இருந்தும் வீண் பொலிவிழந்தது பனச்சியம்மன் கோவில்
ரூ.100 கோடி சொத்து இருந்தும் வீண் பொலிவிழந்தது பனச்சியம்மன் கோவில்
ரூ.100 கோடி சொத்து இருந்தும் வீண் பொலிவிழந்தது பனச்சியம்மன் கோவில்
ரூ.100 கோடி சொத்து இருந்தும் வீண் பொலிவிழந்தது பனச்சியம்மன் கோவில்
ADDED : ஜன 12, 2024 12:40 AM

சென்னை, நங்கநல்லுார் 4வது பிரதான சாலையில் அமைந்துள்ளது பனச்சியம்மன் கோவில். நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில், கிராம தெய்வமாக விளங்கி வருகிறது.
ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, 2.5 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட குளமும், பல ஏக்கர் நிலமும் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இக்கோலுக்கு சொந்தமான சர்வே எண்: 37ல் இருந்த 2.89 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்கப்பட்டு, மதில் சுவர் எழுப்பி பாதுகாக்கப்படுகிறது.
அதேபோல், கோவில் குளம் சென்னை மாநகராட்சி சார்பில் நடைபாதை, இருக்கை, விளக்கு வசதிகள், பூங்கா என, 1.26 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது.
ஆனால், பனச்சியம்மன் கோவில் மட்டும் சிதலமடைந்து காணப்படுகிறது. எனவே, இக்கோவிலுக்கு அறநிலையத்துறை தனிக்கவனம் செலுத்தி, திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:
நங்கநல்லுாரின் கிராம தேவதையான பனச்சியம்மன் கோவில், 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இக்கோவிலில் உத்தரவு கேட்டு பல கோவில்களிலும் விழா நடத்தப்படுவது வழக்கம்.
ஆடி மாதம் உள்ளிட்ட சில திருவிழாக்கள் விமரிசையாக நடந்து வந்தது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு சொந்தமாக, 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்கள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நங்கநல்லுாரில் மீட்கப்பட்டு மதில் சுவருடன் பாதுகாக்கப்பட்ட, 2.89 ஏக்கர் இடம் வருமானம் இன்றி காணப்படுகிறது. கோவிலுக்கு தற்போது உண்டியல் மட்டுமே வருமானமாக உள்ளது.
ஆண்டிற்கு, இரண்டு முறை உண்டியல் திறந்து பணம் எடுத்துச் செல்லும் அறநிலையத்துறை அதிகாரிகள், அதன்பின் திரும்பி கூட பார்ப்பதில்லை. இங்கு தரிசிக்க வரும் பக்தர்கள் மட்டுமே, கோவிலுக்கு தேவையானவற்றை செய்து வருகின்றனர்; அறநிலையத்துறையினர் கண்டுக்கொள்வதில்லை.
பனச்சியம்மன் கோவிலுக்கு கடைசியாக, 2005ம் ஆண்டு திருப்பணி நடத்தி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் கோவில் பராமரிப்பு பணிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை. கடந்த மாதம் புயல் மழைக்கு வேரோடு சாய்ந்த மரம், இன்றளவில் அகற்றப்படவில்லை. இதனால், கோவில் பிரஹாரம் சுற்றி கூட வரமுடியவில்லை.
எனவே, அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி, கோவிலுக்கு திருப்பணி மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். கோவில் சொத்தில் வருமானத்திற்கான வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- -நமது நிருபர் --