ADDED : ஜன 06, 2024 12:16 AM
திருவொற்றியூர், எண்ணுாரில், அமோனியாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் துவக்கி வைத்தார். மேலும், 10 நாளாக போராடி வரும் மக்களிடம் பேசினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
அமோனியா நச்சு புகையால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. கடலுார், துாத்துக்குடி, எண்ணுார் போன்ற எளிய மக்கள் வாழும் இடங்களில், திட்டமிட்டு நச்சு ஆலை செயல்படுகிறது. எண்ணுாரில் மக்கள் வாழவே முடியாது.
பாதிக்கப்படும் மக்களில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 12.5 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட, அமோனியா தொட்டி உள்ளது. இதில், 2 டன் அளவிற்கே கசிவு ஏற்பட்டது.
ஒட்டுமொத்தமாக கசிந்திருந்திருந்தால், சென்னை முழுதும் அழிந்திருக்கும். அமோனியா கசிவு ஏற்பட்டு, 10 நாட்கள் கழித்தே, கலெக்டர் வருகிறார். தேர்தல் தேதி, அறிவித்த பின்பே, 6,000 நிவாரணம் வழங்க உள்ளனர்.
இவ்வாறு, சீமான் கூறினார்.