Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னையில் குடிநீர் திருட்டை தடுக்க பறக்கும் படை அமைக்க வாரியம் முடிவு

சென்னையில் குடிநீர் திருட்டை தடுக்க பறக்கும் படை அமைக்க வாரியம் முடிவு

சென்னையில் குடிநீர் திருட்டை தடுக்க பறக்கும் படை அமைக்க வாரியம் முடிவு

சென்னையில் குடிநீர் திருட்டை தடுக்க பறக்கும் படை அமைக்க வாரியம் முடிவு

ADDED : மே 29, 2025 12:28 AM


Google News
சென்னை, சென்னை குடிநீர் வாரியம் சார்பில், 16.80 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. தினமும், 106 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

ஒரு நபருக்கு, 135 லிட்டர் குடிநீர் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு வீட்டுக்கு, 800 முதல் 1,500 லிட்டர் வரை தினமும் வழங்கப்படுகிறது.

ஆனால், முறையாக குடிநீர் வினியோகிப்பதில்லை, அப்படியே வந்தாலும், குறைந்த அளவு வருவதாகவும், கலங்கல், துர்நாற்றம் வீசுகிறது போன்ற புகார்கள், பல பகுதிகளில் இருந்து வந்தன.

ஆனால், தெரு மற்றும் பிரதான குழாய்களை ஆய்வு செய்த வாரிய பொறியாளர்கள், குடிநீர் வினியோகத்தின் அளவில் மாற்றமில்லை என்பதை கண்டறிந்தனர்.

ஆனாலும் குடிநீர் முறையாக வீடுகளுக்கு செல்லாதது குறித்து ஆய்வு செய்தபோது, பல விடுதிகள், ஹோட்டல்களில், குழாய் இணைப்பில் மோட்டார் பொருத்தி, குடிநீரை திருடுவது தெரிந்தது.

இதையடுத்து, சென்னையில் அதிரடியாக சோதனை நடத்தி, 250க்கும் மேற்பட்ட மோட்டார்கள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்து, இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இதில், சில அதிகாரிகள், கவுன்சிலர்கள் கூட்டு சேர்ந்து ஈடுபட்டதும் தெரிந்தது. அதனால், பறக்கும் படை அமைத்து, திடீர் சோதனை நடத்தி குடிநீர் திருட்டை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, சென்னை முழுதும் பறக்கும் படை அமைக்க, வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

வீடுகளுக்கு போதிய குடிநீர் வழங்கியும், அவை முறையாக வந்து சேரவில்லை என, புகார் எழுந்தது. விசாரணையில், விடுதிகள், ஹோட்டல்களில் மோட்டார் பொருத்தி குடிநீரை திருடுவது தெரிந்தது.

இதனால், 15 மண்டலங்களிலும், பறக்கும் படை அமைக்க முடிவு செய்துள்ளோம். இதில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் கொண்ட குழுவினர், வெவ்வேறு மண்டலங்களில் இருந்து இடம் பெறுவர்.

அவர்களும் முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து, அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளோம்.

வீடு, விடுதி, ஹோட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் மோட்டார் பொருத்தி குடிநீரை திருடினால், 1916 அல்லது 044 - 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

தெரிவித்தவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் வழங்க, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us