Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பிராட்வே மற்றும் வள்ளலார் நகரில் விரைவில் தற்காலிக பஸ் நிலையம்

பிராட்வே மற்றும் வள்ளலார் நகரில் விரைவில் தற்காலிக பஸ் நிலையம்

பிராட்வே மற்றும் வள்ளலார் நகரில் விரைவில் தற்காலிக பஸ் நிலையம்

பிராட்வே மற்றும் வள்ளலார் நகரில் விரைவில் தற்காலிக பஸ் நிலையம்

ADDED : செப் 10, 2025 12:40 AM


Google News
சென்னை, பிராட்வே மற்றும் வள்ளலார் நகர் பேருந்து நிலையத்திற்கு மாற்றாக, ஒரு மாதத்திற்குள் தற்காலிக பேருந்து நிலையங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன.

சென்னை பிராட்வே பேருந்து நிலையம், 870 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. அதேபோல், வள்ளலார் நகர் பேருந்து நிலையம், 10 கோடி ரூபாய் மதிப்பில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் மற்றும் இப்பேருந்து நிறுத்தங்களுக்கான தற்காலிக மாற்று இடம் தேர்வு குறித்து, மாநகராட்சி ராயபுரம் மண்டல அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், மாநகராட்சி, மாநகர போக்குவரத்து கழகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

கடந்த 75 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த பிராட்வே பேருந்து நிலையம், 'மல்டிலெவல்' கார் பார்க்கிங் உட்பட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது. பயணியர் வசதிக்காக, ராயபுரம் கிளைவ் பேக்டரி அருகே மற்றும் தீவுத்திடல் ஆகிய இரண்டு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல், வள்ளலார் நகர் பேருந்து நிலையம், ராயபுரம் மண்டல அலுவலகத்திற்கு எதிரே உள்ள, 1 ஏக்கர் பரப்பளவு இடம் மற்றும் டான்சிக்கு சொந்தமான 1.5 ஏக்கர் பரப்பளவு இடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட உள்ளது. இங்கு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த தற்காலிக பேருந்து நிலையங்கள் ஒரு மாதத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இங்கு பயணியர் வசதிக்காக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us