ADDED : ஜன 11, 2024 01:17 AM

சென்னை, மெட்ரோ ரயில் பாதையில், துாண்களின் மீது மேம்பாலங்களை அமைத்து இணைக்க, நாட்டிலேயே முதல் முறையாக அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்டு ராட்சத கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த கனரக வாகனம், 12 அச்சுகளில் தலா எட்டு டயர்கள் என, மொத்தம் 96 டயர்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் மேம்பால பாதைக்கு தயாரிக்கப்பட்ட பாலங்களை, இதன் வாயிலாக எளிதில் கொண்டு சென்று, துாண்களில் நிறுவ முடியும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் லார்சன் அண்L டூப்ரோ நிறுவனத்தின் திட்ட குழுவினர் இணைந்து இந்த 'புல்லர் ஆக்சில்' என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒக்கியம்பேட்டை மற்றும் காரப்பாக்கம் இடையே, 185 டன், 30 மீட்டர் நீளம் உடைய 'யு' வடிவ கர்டர் பாலம் நேற்று அமைக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வணிக பயன்பாடு அதிகரிக்க நடவடிக்கை
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில், தொழில் நடத்தும் உரிமம் பெற்ற உரிமையாளர்கள் உடனான இரண்டாவது வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம், நந்தனத்தில் நேற்று நடைபெற்றது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிதி இயக்குனர் பிரசன்னகுமார் ஆச்சார்யா, தலைமை பொதுமேலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும், கடை உரிமையாளர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், உரிமம் பெற்றவர்கள் தொழில் முனைவோர் தங்களது கோரிக்கைகள், பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக இடம் தேவைப்படுவோருக்கு இடம் ஒதுக்கீடு செய்து தரப்பட உள்ளது.
தற்போது, வணிகம் செய்து வரும் இடத்திற்கான கட்டண நிர்ணயம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் அதைச் சார்ந்த வெளி பகுதிகளில் கடைகள் நடத்த வாய்ப்புகள் குறித்தும், வணிக மேம்பாடு உத்திகளை நடைமுறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.