ADDED : ஜன 11, 2024 01:01 AM

வில்லிவாக்கம், சிட்கோ நகரில், எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியில், 2.55 கோடி ரூபாயில் புதிதாக சமூகநலக்கூடம் கட்டும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
சென்னை, அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டு, சிட்கோ நகர், நான்காவது பிரதான சாலையில், 12 ஆண்டுகளுக்கு முன், சென்னை மாநகராட்சி சார்பில், சமூகநலக்கூடம் கட்டப்பட்டது. இங்கு, 2,000 ரூபாய் முதல் வாடகை வசூலிக்கப்பட்டதால், ஏராளமான ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
அதன்பின், சமூகநலக் கூடத்தை முறையாக பராமரிக்காததால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், பயன்பாடின்றி பூட்டி வைக்கப்பட்டது.
நம் நாளிதழில் பல முறை சுட்டிக் காட்டிய பின், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து, இங்கு புதிதாக சமூக நலக்கூடம் கட்டும் பணிகள் துவங்க உள்ளன. முதல்கட்டமாக, பழைய கட்டத்தை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து, 94வது வார்டு கவுன்சிலரும், அண்ணா நகர் மண்டல குழு தலைவருமான கூ.பி.ஜெயின் கூறியதாவது:
சிட்கோ நகரில், 10 ஆண்டுகளுக்கு மேல் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று, எம்.எல்.ஏ., வெற்றி அழகன் மேம்பாட்டு நிதியில் இருந்து, 2.55 கோடி ரூபாய் செலவில், புதிதாக சமூக நலக்கூடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, 'டெண்டர்' விடப்பட்டு பொங்கல் பண்டிக்கைக்குப் பின் பணிகள் துவங்க உள்ளன.
ஒன்பது ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில், 'பார்க்கிங்' வசதியுடன் இரண்டு அடுக்குமாடி கொண்ட கட்டடம் கட்டப்படுகிறது. அருகில் உள்ள அம்மா குடிநீர் மையமும் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த இடமும் இத்துடன் இணைகிறது
முதல்கட்டமாக, வாகனம் நிறுத்தும் இடம் மற்றும் முதல் தளம் கட்டப்படுகிறது. அதை தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்கிய பின், இரண்டாம் அடுக்கு கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.