Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அதிர்ச்சி!: தெருநாய் கடித்ததில் 'ரேபிஸ்' தாக்கி ஒருவர் பலி; தடுப்பூசி செலுத்தியும் காப்பாற்ற முடியாத சோகம்

அதிர்ச்சி!: தெருநாய் கடித்ததில் 'ரேபிஸ்' தாக்கி ஒருவர் பலி; தடுப்பூசி செலுத்தியும் காப்பாற்ற முடியாத சோகம்

அதிர்ச்சி!: தெருநாய் கடித்ததில் 'ரேபிஸ்' தாக்கி ஒருவர் பலி; தடுப்பூசி செலுத்தியும் காப்பாற்ற முடியாத சோகம்

அதிர்ச்சி!: தெருநாய் கடித்ததில் 'ரேபிஸ்' தாக்கி ஒருவர் பலி; தடுப்பூசி செலுத்தியும் காப்பாற்ற முடியாத சோகம்

UPDATED : செப் 15, 2025 05:52 PMADDED : செப் 15, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
சென்னை; சென்னையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மாநகராட்சி திணறி வரும் நிலையில், அவற்றால் பகுதி மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஜூலையில் வெறி நாய்க்கடி பாதிப்புக்கு உள்ளான நபர், 'ரேபிஸ்' நோய் தாக்கியதில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.மற்றொரு சம்பவத்தில் மூதாட்டி, நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை மாநகராட்சியில், 2018ல் 57,366 தெருநாய்கள் இருந்தன. 2024ல் இவற்றின் எண்ணிக்கை, 1.80 லட்சமாக இரு மடங்கு அதிகரித்தது.

அதிகபட்சமாக அம்பத்துாரில் 23,980; மாதவரத்தில் 12,671; குறைந்தபட்சமாக ஆலந்துாரில் 4,875 தெருநாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5 லட்சம் தெருநாய்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இவற்றை கட்டுப்படுத்த முடியாமல், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் திணறி வருவதால், ஒவ்வொரு தெருக்களிலும் எட்டுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன.

ஒட்டுண்ணி

அவை, சாலையில் நடந்து செல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்கின்றன. தவிர, சாலையின் குறுக்கே ஓடும் நாய்களால் விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. சென்னையில் மட்டும் தினமும், 10க்கும் மேற்பட்டோர் தெருநாய் மற்றும் வளர்ப்பு நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஒன்பது மாதங்களில் சென்னையில் 9,000 பேர் உட்பட நான்கு மாவட்டங்களிலும் 60,000க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை போன்ற நகரங்களில் தெருநாய்களை கட்டுப்படுத்த, நாய் கருத்தடை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தினமும் 10 முதல் 20 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. மேலும், வெறி நாய்க்கடி பாதிப்பை தடுக்க, 'ரேபிஸ்' தடுப்பூசியும் போடப்பட்டு, ஒட்டுண்ணி நீக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், இந்த நடவடிக்கையால் பெருமளவில் பலனில்லை. சென்னையை ஒட்டியுள்ள மாவட்ட நிர்வாகங்களும், தெருநாய்களை கட்டுப்படுத்த பெரிதாக நடவடிக்கை எடுப்பதில்லை.

இந்நிலையில், சென்னையில் நாய்க்கடியால் ஒருவர் உயிரிழந்த சம்பவம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐஸ்ஹவுஸில் டாக்டர் பெசன்ட் சாலையில் வசித்தவர் முகமது நஸ்ருதீன், 50. ஆட்டோ ஓட்டுநரான இவர், ஐஸ்ஹவுஸ் சந்தை பகுதியில் ஜூலை மாதம் நடந்து சென்றார்.

அப்போது, தெருநாய் ஒன்று முகமது நஸ்ருதீனின் முழங்காலில் கடித்தது; உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் தடுப்பூசி போட்டு வீடு திரும்பினார். இதன்பின், கடந்த 12ம் தேதி, முகமது நஸ்ருதீனுக்கு தீவிர காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாற்றம்

சிகிச்சையின் போது, அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதால், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தனி அறையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். தெருநாய் கடித்து, ஆட்டோ ஓட்டுநர் ரேபிஸ் பாதித்து உயிரிழந்திருப்பது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் கூட்டமாக சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு, விலங்குகள் நல ஆர்வலர்கள் என்ற பெயரில் பலர் உணவளிக்கின்றனர். ஆனால், நாய்களுக்கு தடுப்பூசி போடுதல், அவற்றுக்கான வாழ்விடத்தை ஏற்படுத்தி தருதல் போன்றவற்றை செய்ய முன் வருவதில்லை. இதுவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்துலாக தெருநாய்கள் உருவெடுக்க காரணம்.

கட்டாயம்

இது குறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:



'ரேபிஸ்' நோய் பாதிப்பால் முகமது நஸ்ருதீன் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோருக்கு, 'ரேபிஸ் இன்யூனோகுளோபளின்' தடுப்பு மருந்தை முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 21வது நாள் என, நான்கு தவணைகளாக செலுத்துவது கட்டாயம்.

இறந்த முகமது, நான்கு தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டாரா என விசாரிக்கப்படும். தற்போது வரை, ஓரிரு தவணை தடுப்பூசி தான் அவர் செலுத்தியதாக தெரிய வந்துள்ளது. முறையாக தடுப்பூசி செலுத்தாமல் இருந்தாலும், ரேபிஸ் நோய் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.

தெருநாய்களை கட்டுப்படுத்த, நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். நாய்கள் நல விரும்பிகளுக்கு மாநகராட்சி ஒத்துழைப்பு அளித்து, நாய்களை தத்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனிதர்கள் இடையே பரவாது

ரேபிஸ் நோயால் முகமது நஸ்ருதீன் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் உடன் இருந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்கிடையே, மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு ரேபிஸ் நோய் பரவாது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அரசு பொது நல டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது: மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு ரேபிஸ் பரவுவது மிக அரிது. ரேபிஸ் பாதிக்கப்பட்டோரிடம் இருந்து உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் நோய் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளது. மற்றபடி தொடுவதாலோ, ஒரே படுக்கையில் படுப்பதாலோ, மலம், சிறுநீர் போன்றவற்றை தொடுவதாலோ ரேபிஸ் பரவியதாக இதுவரை எங்கும் பதிவு செய்யப்படவில்லை. எனினும், பாதிக்கப்பட்டவரின் உமிழ்நீர், ஒருவரின் தோல் பகுதி காயத்தின் மீது நேரடியாக பட்டால், ரேபிஸ் பரவுவதற்கு வாய்ப்பு ஏற்படும். இப்போது வரை இந்தியாவில் மனிதர்களிடையே உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சை தவிர, ரேபிஸ் பரவியதாக பதிவாகவில்லை. ஆனாலும், உடன் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.



வளர்ப்பு நாய்க்கடியால் பாதிப்பு

சென்னை ஜாம்பஜார் நாயர் வரத பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி, 50. இவர், அதே பகுதியில் நடந்து சென்ற போது, பழனி என்பவரின் வளர்ப்பு நாய் கடித்தது. இதில், அவரது காலில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். அத்துடன், நாயின் உரிமையாளர் பழனி மீது, ஜாம்பஜார் காவல் நிலையத்தில் லட்சுமி புகார் அளித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us