/உள்ளூர் செய்திகள்/சென்னை/சிறுவர்களுக்கு மொட்டையடித்த இன்ஸ்., மாற்றம்சிறுவர்களுக்கு மொட்டையடித்த இன்ஸ்., மாற்றம்
சிறுவர்களுக்கு மொட்டையடித்த இன்ஸ்., மாற்றம்
சிறுவர்களுக்கு மொட்டையடித்த இன்ஸ்., மாற்றம்
சிறுவர்களுக்கு மொட்டையடித்த இன்ஸ்., மாற்றம்
ADDED : ஜூன் 26, 2025 02:24 AM

சென்னை, சிறுவர்களுக்கு மொட்டை அடித்த சம்பவத்தில் எம்.கே.பி., நகர் இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அதேபோல், விசாரணை கைதி இறந்த சம்பவத்தில் வேளச்சேரி போலீசார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டர்.
பெண்களை தாக்கிய திருவாலங்காடு ஏட்டு, நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், முல்லை நகர் ஆகிய இடங்களில், நேற்று இரவு, எம்.கே.பி.நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த நான்கு சிறுவர்களை விசாரணைக்காக, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
மேலும், சிறுவர்கள் தலைமுடியில் கலரிங் அடித்து 'புள்ளிங்கோ' போல காணப்பட்டனர். அவர்களை விசாரித்த இன்ஸ்பெக்டர் பென்சாம், கலரிங் அடித்த தலைமுடியை வெட்டியதாகக் கூறப்படுகிறது.
அலங்கோலமாக வெட்டப்பட்டதால், 'இந்த முடியுடன் எப்படி வெளியில் செல்ல முடியும்' என, சிறுவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, அனைவரின் தலையையும் மொட்டையடித்து உள்ளனர்.
மேலும், சிறுவர்கள் மீது எந்த வழக்கும் இல்லாததால், அவர்களுக்கு முடிவெட்டி, மொட்டையடித்த சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, சென்னை காவல் ஆணையர் அருணிடம் சமர்ப்பித்தனர். சம்பவம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கமிஷனர் அருண், பென்சாமை காத்திருப்போர் பட்டியலுக்கு நேற்று மாற்றினார்.
கடந்த 2020, ஆக., மாதம், புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது, வாடகை வீட்டை காலி செய்த விவகாரத்தில், பெயின்டரான சீனிவாசனை பென்சாம் தாக்கியதில், அவர் தற்கொலைக்கு முயன்றார். இந்த விவகாரத்தில் பென்சாம், ஏற்கனவே 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேளச்சேரி, ராம்நகர் வடக்கு ஏழாவது பிரதான சாலையில் வசிக்கும் பிரசன்னா என்பவர் வீட்டில் திருட முயன்ற உ.பி., மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த ராஜாநிசாந்த், 37, என்பவரை, கடந்த 20ம் தேதி, வேளச்சேரி போலீசார் பிடித்தனர்.
காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது, இரண்டாவது மாடிக்கு ஓடிய ராஜாநிசாந்த், தப்பிக்க முயன்று விழுந்ததில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இந்நிலையில், பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக, வேளச்சேரி உதவி ஆய்வாளர் ஜம்புலிங்கம், 56, போலீஸ்காரர் ஜெகதீசன், 30, ஆகியோரை 'சஸ்பெண்ட்' செய்து, சென்னை தெற்கு மண்டலம் இணை கமிஷனர் கல்யாண், நேற்று உத்தரவிட்டார்.