Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கவுன்சிலர்களின் தனிப்பட்ட விவகாரங்கள் பேச அண்ணாநகர் மண்டலத்தில் ரகசிய கூட்டம்

கவுன்சிலர்களின் தனிப்பட்ட விவகாரங்கள் பேச அண்ணாநகர் மண்டலத்தில் ரகசிய கூட்டம்

கவுன்சிலர்களின் தனிப்பட்ட விவகாரங்கள் பேச அண்ணாநகர் மண்டலத்தில் ரகசிய கூட்டம்

கவுன்சிலர்களின் தனிப்பட்ட விவகாரங்கள் பேச அண்ணாநகர் மண்டலத்தில் ரகசிய கூட்டம்

ADDED : ஜூன் 10, 2025 12:20 AM


Google News
கவுன்சிலர்களின் தனிப்பட்ட விவகாரங்கள் மற்றும் பிரச்னைகளை பேசுவதற்காக, அண்ணா நகர் மண்டலத்தில் ரகசிய கூட்டங்கள் நடத்தப்படுவது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையின் உட்கட்டமைப்பு வசதிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் தெரு மற்றும் பகுதிக்கு தேவையான உட்கட்டமைப்புகள் குறித்து, அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடம் கோரிக்கை மனுவாக அளித்து வருகின்றனர். அதன்படி, கவுன்சிலர்கள் மாதந்தோறும் நடக்கும் மண்டல அலுவலகங்களில், அக்கோரிக்கை குறித்து பேசி, அவற்றை தீர்மானமாக கொண்டு வர வேண்டும்.

அந்த தீர்மானம், மாநகராட்சி நிலைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டு, கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, பணிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டலத்தில், கவுன்சிலர்கள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் ரகசியமாகவே நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மண்டல குழு தலைவர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், ஒருசில அதிகாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வளாகமும் உள்ளே பூட்டப்படுகிறது.

பூட்டப்பட்ட அறைக்குள், கவுன்சிலர்கள் தங்களுக்கு சேர வேண்டிய கமிஷன், இதர தனிப்பட்ட கோரிக்கைகள் குறித்து தான் அதிகம் பேசுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

வார்டு சார்ந்த பிரச்னைகளை ஒருசில கவுன்சிலர்கள் பேசினாலும், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. எனவே, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில், தங்கள் பகுதி கவுன்சிலர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில், பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

எங்களது பிரச்னை குறித்து கவுன்சிலர்களின் மனுவாக அளிக்கிறோம். ஆனால் அந்த பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் பேசப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. மேயர் தலைமையில் நடக்கும் மாநகராட்சி கூட்டமே வெளிப்படையாக நடக்கும் போது, வார்டு கூட்டம் மட்டும் ஏன் ரகசியமாக நடத்த வேண்டும். இப்படி இருந்தால் நிர்வாகம் எப்படி இருக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us