Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருநீர்மலையில் ரூ.10 கோடி அரசு நிலம்... கபளீகரம் அகற்ற ஆர்வம் காட்டாத வருவாய்துறை

திருநீர்மலையில் ரூ.10 கோடி அரசு நிலம்... கபளீகரம் அகற்ற ஆர்வம் காட்டாத வருவாய்துறை

திருநீர்மலையில் ரூ.10 கோடி அரசு நிலம்... கபளீகரம் அகற்ற ஆர்வம் காட்டாத வருவாய்துறை

திருநீர்மலையில் ரூ.10 கோடி அரசு நிலம்... கபளீகரம் அகற்ற ஆர்வம் காட்டாத வருவாய்துறை

ADDED : செப் 02, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
திருநீர்மலை :திருநீர்மலை பச்சைமலையின் ஒரு பகுதியில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை தனியார் சிலர் கம்பி வேலிகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும், ஆக்கிரமிப்பை அகற்றாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

சென்னை தாம்பரத்தை அடுத்த திருநீர்மலையில், பச்சைமலை உள்ளது. இம்மலையை சுற்றி சானடோரியம், மெப்ஸ், மீனாட்சி நகர், துர்கா நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, காசநோய் மருத்துவமனை ஆகியவை உள்ளன.

இந்நிலையில், துர்கா நகர் பிரதான சாலையை ஒட்டியுள்ள, பச்சை மலையின் அடிப்பகுதியில், 1.5 ஏக்கர் அரசு நிலம் காலியாக உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். நிலத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்ததோடு, 'கேட்' போடுவதற்கு இரண்டு புறமும் பில்லர் அமைத்துள்ளனர்.

மலையின் கீழ் பகுதியில், கண்ணெதிரே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அறிந்து, அப்பகுதி மக்கள், செங்கல்பட்டு கலெக்டர் முதல் வருவாய் துறையினர் வரை, பல அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

அப்படியிருந்தும், ஆக்கிரமிப்பை அகற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலத்தின் மதிப்பு, 10 கோடி ரூபாய்.

இதுகுறித்து, திருநீர்மலையை சேர்ந்த ஆர்.எஸ்.சுபாஷ், 64, கூறியதாவது:

மலையின் கீழ் பகுதியில் காலியாக உள்ள இடத்தை, இப்பகுதி வாலிபர்கள், விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன் சிலர், சுற்றி கம்பி வேலி அமைத்து, 'கேட்' போடுவதற்கு பில்லர் அமைத்து, ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால், இப்பகுதி வாலிபர்கள் விளையாடுவதற்கு இடமின்றி தவிக்கின்றனர்.

அரசு நிலத்தை வேலி அமைத்து, பில்லர் போட்டு பக்காவாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து, செங்கல்பட்டு கலெக்டரிடம் மூன்று முறை மனு கொடுத்துள்ளோம்.

பல்லாவரம் தாசில்தாரிடம் நேரில் சென்று புகார் தெரிவித்தோம். அப்படியிருந்தும் ஆக்கிரமிப்பை அகற்ற, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தாசில்தாருக்கு ஒவ்வொரு முறையும் போன் செய்யும்போது, 'இதோ நடவடிக்கை எடுக்கிறேன்' என்று கூறுகிறாரே தவிர, நடவடிக்கை எடுக்காமல் தட்டிக் கழித்து வருகிறார்.

யாருக்காக ஆக்கிரமிப்பை அகற்றாமல் உள்ளனர் என்று தெரியவில்லை.

இவ்வாறு, அவர் கூறினார்.

பொக்லைன் இயந்திரம் கேட்டு இருக்கிறோம்! 'ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடம் அரசு நிலம் தான். கோவிலுக்காக வேலி, பில்லர் போட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக, மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்கள், பொக்லைன் இயந்திரம் கொடுத்தவுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். - செந்தில், பல்லாவரம் தாசில்தார்.


விளையாட்டு திடல் அமைக்கலாம் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள அரசு இடத்தை மீட்டு விளையாட்டு திடல் அல்லது பேருந்து நிறுத்தம் அமைக்கலாம் என, பகுதி மக்கள் யோசனை தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: துர்கா நகர், லட்சுமிபுரத்தில், 50,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் வசதிக்காக, துர்கா நகர் - செங்கல்பட்டு இடையே மாநகர பேருந்தும், துர்கா நகர் - திருமுடிவாக்கம் இடையே சிற்றுந்தும் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகள், துர்கா நகரில் இருந்து புறப்படும்போதே நிரம்பி விடுகின்றன. அதனால், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள இடத்தை மீட்டு, பேருந்து நிறுத்தம் அமைத்து, துர்கா நகரில் இருந்து சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கலாம். அதே போல், இந்த பகுதிகளை சுற்றி விளையாட்டு திடல் இல்லை. இங்கு விளையாட்டு திடல் அமைத்தால் திருநீர்மலை, துர்கா நகர், நியுகாலனி, நாகப்பா நகர், சந்திரன் நகர், குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு, காமாட்சி நகர் பகுதிகளை சேர்ந்த மாணவ - மாணவியர், வாலிபர்களுக்கு வசதியாக இருக்கும். இவ்வாறு அப்பகுதி மக்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us