Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'மில்லிங்' செய்யாமலேயே சாலை சீரமைப்பு பருவமழைக்கு தாக்குப்பிடிப்பது கேள்விக்குறி

'மில்லிங்' செய்யாமலேயே சாலை சீரமைப்பு பருவமழைக்கு தாக்குப்பிடிப்பது கேள்விக்குறி

'மில்லிங்' செய்யாமலேயே சாலை சீரமைப்பு பருவமழைக்கு தாக்குப்பிடிப்பது கேள்விக்குறி

'மில்லிங்' செய்யாமலேயே சாலை சீரமைப்பு பருவமழைக்கு தாக்குப்பிடிப்பது கேள்விக்குறி

ADDED : செப் 08, 2025 06:11 AM


Google News
Latest Tamil News
சென்னை: மாதவரம் நெடுஞ்சாலையில், பழைய தார் பகுதியை பெயர்த்து எடுக்கும், 'மில்லிங்' பணி செய்யாமல் சீரமைக்கப்படுவதால், பருவமழைக்கு தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், வடகரை சந்திப்பு அருகே துவங்கும் மாதவரம் நெடுஞ்சாலை, மஞ்சம்பாக்கத்தில் வடக்கு உள்வட்ட சாலையில் இணைகிறது. இது, 7 கி.மீ., நீளம் கொண்டது.

இந்த சாலையின் ஒரு பகுதி, திருவள்ளூர் மாவட்ட எல்லையிலும், மற்றொரு பகுதி சென்னை மாநகராட்சி எல்லைக்குள்ளும் உள்ளது.

இதில் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 4 கி.மீ., சாலையில், நகராட்சி நிர்வாகத் துறை வாயிலாக மழைநீர் வடிகால்வாய், கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிகள், ஐந்து மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக, சாலையின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டதால், வாகனங்கள் தடுமாறிச் சென்று வந்தன. சிறுசிறு விபத்துகளிலும் வாகன ஓட்டிகள் சிக்கினர்.

தற்போது, இந்த சாலை புனரமைப்பு பணியை நெடுஞ்சாலைத் துறையினர் துவங்கியுள்ளனர். சாலை புதுப்பிப்பு பணிகளின்போது, ஏற்கனவே இருந்த பழைய தார் பகுதியை, 'மில்லிங்' பணி செய்து அகற்ற வேண்டும்.

அதன்பின், சாலை பணியை மேற்கொள்ள வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினும், துறை அமைச்சர் வேலுவும் உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால், மில்லிங் செய்யாமல், மாதவரம் நெடுஞ்சாலை புனரமைப்பு பணி நடந்து வருகிறது.

தற்போது சாலை அமைக்கும் பகுதியில், வடகிழக்கு பருவமழை காலங்களில், ரெட்டேரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் மார்பளவிற்கு தேங்குவது வழக்கம்.

அப்போது, சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும். அதன்பின், படிப்படியாக வெள்ளம் வடிந்ததும், போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும்.

தற்போது, மில்லிங் செய்யாமல் ஒட்டுபோடப்படும் சாலை, பருவ மழை முடியும் வரை தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கழிவுநீர் குழாய் புதைப்பு பணியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க, குறைந்த அளவு நிதி வழங்கப்பட்டுள்ளதால், அதற்கேற்ப சாலை அமைத்து வருகிறோம்.

பருவ மழை ஓய்ந்ததும், மீண்டும் சாலை புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படும். இந்த சாலை விரிவாக்க பணிக்கு, 40 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதனால், உரிய தரத்தில் இந்த சாலை அமைக்கப்படுவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us