Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் விநாயகர் கோவில் அகற்றம்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் விநாயகர் கோவில் அகற்றம்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் விநாயகர் கோவில் அகற்றம்

கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் விநாயகர் கோவில் அகற்றம்

ADDED : ஜன 11, 2024 01:18 AM


Google News
Latest Tamil News
கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில், தற்போது காவல் நிலையமாக மாற்றப்பட்ட புறக்காவல் நிலையத்தின் அருகில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் கோவில் இருந்தது.

இந்த கோவிலில், தொடர்ந்து பூஜைகள் நடந்து வந்துள்ளன. ஊரப்பாக்கம், அய்யஞ்சேரி, காரணைப்புதுச்சேரி போன்ற சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், இங்கு வழிபட்டு வந்து உள்ளனர்.

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணிகள், கடந்த 2019ல் துவக்கப்பட்டன. அப்போது, இந்த விநாயகர் கோவிலில் தான், பூமி பூஜை நடத்தப்பட்டது.

இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், இந்த கோவில் கருவறையில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டு, நேற்று முன்தினம் இரவோடு இரவாக, கோவில் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது.

இது தெரியவந்ததும், அப்பகுதிவாசிகள் கோவில் இருந்த இடத்தில் திரண்டனர். ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ., நிர்வாகிகளும் வந்து பார்வையிட்டதால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தலைமையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக வந்த தகவலையடுத்து, தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்படி, அதிதீவிர பாதுகாப்பு படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். கோவில் அகற்றப்பட்டது குறித்து, சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் கூறியதாவது:

இதற்கு முன், இந்த இடம் வி.ஜி.பி., நிறுவனத்தின் குத்தகையில் இருந்தது.

அதனால், இந்த நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. அதில், 'இந்த இடம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்குச் சொந்தமானது' என, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதைத் தொடர்ந்து, வி.ஜி.பி., நிறுவனம் இந்த இடத்தில் வைத்திருந்த உலக அமைதி மாதா கோவில் மற்றும் மண்டபம் உள்ளிட்ட கட்டுமானங்கள், பேருந்து நிலையம் கட்டும் பணிக்காக அகற்றப்பட்டன.

விநாயகர் கோவில் மட்டும் அப்படியே விடப்பட்டதால், குத்தகை எடுத்த நிறுவனத்தினர் பிரச்னை செய்து வந்தனர். அது தொடர்பாக, தொடர்ச்சியாக மனுக்கள் போட்டு வந்தனர். இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே, தற்போது விநாயகர் கோவில் அகற்றப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us