Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/முறையான பராமரிப்பின்றி பொலிவிழந்த ராமாபுரம் ஏரி

முறையான பராமரிப்பின்றி பொலிவிழந்த ராமாபுரம் ஏரி

முறையான பராமரிப்பின்றி பொலிவிழந்த ராமாபுரம் ஏரி

முறையான பராமரிப்பின்றி பொலிவிழந்த ராமாபுரம் ஏரி

ADDED : ஜன 11, 2024 01:24 AM


Google News
Latest Tamil News
ராமாபுரம், ராமாபுரம் ஏரி போதிய பராமரிப்பின்றி, அங்குள்ள நடைபாதையில் மரக்கழிவுகள் குவிந்தும், தண்ணீரில் ஆகாய தாமரை படர்ந்தும் காட்சியளிக்கிறது.

சென்னை வளசரவாக்கம் மண்டலம், 155வது வார்டில், 27 ஏக்கர் பரப்பளவில் ராமாபுரம் ஏரி உள்ளது. ஒரு காலத்தில், விவசாயத்திற்கு பயன்பட்ட இந்த ஏரி, தற்போது ஆக்கிரமிப்பால், 3 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கி உள்ளது.

ராமாபுரம் ஏரியில் நடக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்து, 2012 முதல் தொடர்ந்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு வந்தது.

இந்த ஏரி, எந்த துறை பராமரிப்பில் உள்ளது என்பதே, ஆரம்பத்தில் பெருங்குழப்பமாக இருந்தது.

இது குறித்தும், நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரிகள் மட்டுமே, எங்கள் பராமரிப்பில் வரும் எனவும், ராமாபுரம் ஏரி வருவாய் துறை பராமரிப்பில் உள்ளது எனவும், பொதுப்பணித் துறை தெரிவித்தது.

வருவாய் துறையோ, ஏரியை மாநகராட்சி பராமரிக்க கேட்டுக் கொண்டதுடன், 2015 ஏப்ரலில், ராமாபுரம் ஏரி, சென்னை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, மாநகராட்சி சார்பில் ஏரியை சர்வே செய்து, 9 லட்சம் ரூபாய் செலவில் வேலி அமைக்கப்பட்டது. சில மாதங்களிலேயே அந்த வேலி மாயமானது.

அதன்பின், 2017ல், 94 லட்சம் ரூபாய் செலவில், ஏரியைச் சுற்றி சுவர் எழுப்பி, நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டது.

ஆனால், அந்த பணிகள் நடக்கவில்லை. ஏரி கரையோரம் ஆக்கிரமிப்பாக இருந்த, 24 கட்டடங்களில், 54 கடைகளும், 24 வீடுகளும், 2018 ஏப்ரலில் இடிக்கப்பட்டன.

கடந்த, 2019 ஜூலையில், ராமாபுரம் ஏரியில், 88.86 லட்சம் ரூபாய் மதிப்பில், துார்வாரி, கரை சீரமைக்கும் பணியை மாநகராட்சி மேற்கொண்டது.

ஏரியின் முகப்பில் பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது, ஏரியை சுற்றி அமைக்கப்பட்ட நடைபாதை சிதிலமடைந்து, புதர் மண்டி, மரக்கழிவுகளால் நிரம்பி உள்ளன.

அத்துடன், நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆகாய தாமரை படர்ந்து அசுத்தமாக காட்சியளிக்கிறது. எனவே, ஏரியை சுற்றி உள்ள நடைபாதையை சீர் செய்வதுடன், தண்ணீரில் படர்ந்துள்ள ஆகாய தாமரையையும் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us