/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 165 இடங்களில் தானியங்கி சிக்னல் சோதனையை துவக்கிய போலீசார் 165 இடங்களில் தானியங்கி சிக்னல் சோதனையை துவக்கிய போலீசார்
165 இடங்களில் தானியங்கி சிக்னல் சோதனையை துவக்கிய போலீசார்
165 இடங்களில் தானியங்கி சிக்னல் சோதனையை துவக்கிய போலீசார்
165 இடங்களில் தானியங்கி சிக்னல் சோதனையை துவக்கிய போலீசார்
ADDED : ஜூன் 18, 2025 12:26 AM

சென்னையில் முதல்முறையாக, 165 இடங்களில் சென்சார் கேமரா அடிப்படையில் இயங்கும் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த சிக்னலில், சென்சார் தொழில்நுட்பத்துடன் கூடிய கேமரா அமைக்கப்படுவதால், போக்குவரத்திற்கு ஏற்ப சிக்னல்களை தாமாக மாற்றிக் கொள்ளும்.
தேவைப்படும் நேரங்களில் போக்குவரத்து போலீசாரும், ரிமோட் வாயிலாக சிக்னல்களை இயக்கும் வசதியும் உள்ளது.
இத்திட்டம் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வர உள்ள நிலையில், சென்சார் சிக்னல் அமைக்கப்பட்ட சாலைகளில், போக்குவரத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, போக்குவரத்து உதவி கமிஷனர் கூறியதாவது:
முதற்கட்டமாக ஈ.வி.ஆர்., சாலையில் உள்ள, 13 சிக்னல்களில் சென்சார் சிக்னல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை சோதனை செய்து வருகிறோம்.
ரிமோட் வாயிலாகவும் சிக்னல்கள் இயக்கி, போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள ரிமோட்டில், ஒரே சமயத்தில் அனைத்து சிக்னல்களையும் நிறுத்தி சிவப்பு விளக்கு எரியும்படி செய்ய முடியும்.
சாலை விழிப்புணர்வு ஏற்படுத்தும்போது, அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். பாதசாரிகள் கடப்பதற்கும் சிக்னல்களில், 'ஸ்விட்ச்' அமைக்கப்பட்டுள்ளது. அவற்றை அழுத்தினால் சிக்னல் விளக்குகள் மாறியபின் பாதசாரிகள் கடந்து செல்ல முடியும்.
புதிய சிக்னல்களை இயக்குவதற்காக வழங்கப்பட்ட ரிமோட் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
***
- நமது நிருபர் -