/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஓ.எம்.ஆர்., டைடல் பார்க் சந்திப்பில் சாலையின் குறுக்கே கடக்கும் பாதசாரிகள் ரூ.12 கோடி நடைமேம்பாலத்தால் பயனில்லை ஓ.எம்.ஆர்., டைடல் பார்க் சந்திப்பில் சாலையின் குறுக்கே கடக்கும் பாதசாரிகள் ரூ.12 கோடி நடைமேம்பாலத்தால் பயனில்லை
ஓ.எம்.ஆர்., டைடல் பார்க் சந்திப்பில் சாலையின் குறுக்கே கடக்கும் பாதசாரிகள் ரூ.12 கோடி நடைமேம்பாலத்தால் பயனில்லை
ஓ.எம்.ஆர்., டைடல் பார்க் சந்திப்பில் சாலையின் குறுக்கே கடக்கும் பாதசாரிகள் ரூ.12 கோடி நடைமேம்பாலத்தால் பயனில்லை
ஓ.எம்.ஆர்., டைடல் பார்க் சந்திப்பில் சாலையின் குறுக்கே கடக்கும் பாதசாரிகள் ரூ.12 கோடி நடைமேம்பாலத்தால் பயனில்லை
ADDED : மே 21, 2025 12:46 AM

சென்னை :ஓ.எம்.ஆரில் முக்கிய சந்திப்பாக, டைடல் பார்க் உள்ளது. ஐ.டி., நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால், ரயில், பேருந்து போக்குவரத்துக்கு, இந்த சந்திப்பை, பயணியர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், இங்கு வாகன நெரிசல் மற்றும் பாதசாரிகள் சாலையை கடந்து செல்வது அதிகமாக உள்ளது. இதற்கு தீர்வு காண, 18 கோடி ரூபாயில், 'யு' வடிவ மேம்பாலம் கட்டப்பட்டது.
அதேபோல், பீக்ஹவர்ஸ் நேரத்தில், 300 முதல் 350 பேர் வரை சாலையை கடப்பதால் ஏற்படும் நெரிசலை தடுக்க, 12 கோடி ரூபாயில், 350 அடி நீளம், 10 அடி அகலத்தில் நகரும் படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது.
மேம்பாலம் மற்றும் நடைமேம்பாலம் ஆகியவை, பிப்., 25ம் தேதி திறக்கப்பட்டது. நகரும் படிக்கட்டுகள் இருந்தும், பலர் நடைமேம்பாலத்தை பயன்படுத்தாமல், சாலையிலேயே கடந்து செல்கின்றனர்.
இதனால், டைடல் பார்க் சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால், துரைப்பாக்கத்தில் இருந்து திருவான்மியூர் திரும்பும் வாகனங்கள் நிலைதடுமாறுகின்றன. தினமும், இரண்டு விபத்தாவது நடக்கிறது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சிக்னலை கவனித்து, வாகனத்தை மிதமான வேகத்திலேயே ஓட்டி செல்கிறோம். பாதசாரிகள் குறுக்கே ஓடுவதால், திடீர் பிரேக் போடும் நிலை ஏற்படுகிறது.
அப்போது, பின்னால் வரும் வாகனங்கள் மோதி, விபத்துகள் ஏற்படுகின்றன. அதற்கு காரணமான பாதசாரிகள், எதுவும் தெரியாதது போல், வாகனத்தின் ஊடாக மின்னல் வேகத்தில் சென்றுவிடுவர்.
விபத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள் தான், இழப்பை பேசி தீர்வு காண வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சில நேரங்களில், பாதசாரிகள் மீது மோதிவிடும் நிலை ஏற்படும். அப்போது, வாகன ஓட்டிகள் மீது குறை கூறி, அவர்களுக்கு மருத்துவ செலவு செய்ய வைக்கின்றனர்.
நடைமேம்பாலத்தை பயன்படுத்தும் வகையில், சாலையில் தடுப்பு அமைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
டைடல் பார்க் சந்திப்பில், மெட்ரோ ரயில் பணி நடப்பதால், துரைப்பாக்கத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகனங்கள், சிக்னலை கடந்து செல்கின்றன.
மேம்பாலம் வழியாக செல்வதில்லை. இதனால், சாலையில் தடுப்பு அமைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
மெட்ரோ ரயில் பணி முடிந்தால் தான், பாதசாரிகள் சாலையை கடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க முடியும். நகரும் படிக்கட்டுகளை பயன்படுத்தி, நடைமேம்பாலத்தை பயன்படுத்த, பாதசாரிகள் தான் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.