Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/அழகான கோர்வையில் நிறைவாக பாடிய பதங்கி

அழகான கோர்வையில் நிறைவாக பாடிய பதங்கி

அழகான கோர்வையில் நிறைவாக பாடிய பதங்கி

அழகான கோர்வையில் நிறைவாக பாடிய பதங்கி

ADDED : ஜன 03, 2024 12:17 AM


Google News
Latest Tamil News
கர்நாடக இசை உலகில் வளர்ந்து வரும் கலைஞர்களாக பதங்கி சகோதரர்கள் எனும் டாத்ரே பதங்கி - துருவ் பதங்கி உள்ளனர். மயிலாப்பூர் காயத்ரி பைன் ஆர்ட்ஸ் சபாவில், இவர்களின் கச்சேரி நடந்தது.

முதலாவதாக கரஹரப்பிரியா ராகம், ஆதி தாளத்தில் சித்திரவீணை ரவிக்கிரண் இயற்றிய வர்ணத்தைபாடினர்.

பின், டாத்ரே பதங்கி, சிம்மேந்திர மத்யமம் ராகத்தை ஆலாபனை செய்ய துவங்கினார். விசேஷ பிரயோகங்களால் ராகத்தை அழகாக நிறைவு செய்தார்.

இந்த ராகத்தில், முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய ரூபக தாளத்தில் அமைந்த 'பாமர ஜனபாலினி' கீர்த்தனையை, இருவரும் பாடினர்.

இங்கு, சரணத்தில் 'காமிதார்த்த பாலதாயினி' வரிகளை நிரவல் செய்தனர். அந்த இடத்தில் மிருதங்க இசையுடன் கேட்கும்போது, மேல்காலத்தில் நிரவல் பாடியது பிரமாதமாக இருந்தது. நிரவல் செய்த அதே வரிகளுக்கே ஸ்வரம் பாடத் துவங்கினர். பாடலின் வரிகளுக்கு ஏற்றவாறு அபிப்பிராயம் அமைத்து பாடியது அருமை. 'ஸ ரி க ம ப த நி' என்ற ஸ்வரங்களைக் கொண்டு இவர்கள் பாடியதும், காயத்ரி சிவானி வயலின் இசைத்ததும் ரசிகர்களை குதுாகலப்படுத்தியது.

அழகான ஒரு கோர்வையை உருவாக்கி, அதை நிறைவாக பாடியது, அவர்களின் திறமையை காட்டியது.

அடுத்ததாக, தோடி ராகம் ஆதி தாளத்தில் அமைந்த 'நோற்றுச் சுவர்க்கம்' எனும் ஆண்டாள் திருப்பாவையை குறுகிய நேரத்தில் பாடினர். 'நியாயமா ஸ்ரீராம சந்திரா' என்ற, பட்டணம் சுப்பிரமணிய அய்யர் இயற்றிய மாலவி ராகத்தில், ஆதி தாளத்தில் அமைந்த கீர்த்தனையை பாடினர்.

தொடர்ந்து பாடிய ஸ்வரப்பகுதிகளில் பயன்படுத்திய பிரயோகங்கள் ரசனையானது. அற்புதமான அரிதியுடன் கீர்த்தனை நிறைவுற்றது.

காபி ராக ஆலாபனையை, துருவ் பதங்கி எடுத்தார். மிகவும் நேர்த்தியான அழகான ஆலாபனை. தாரஸ்தாயி பகுதியில் பாடியது அற்புதம்.

இந்த ராகத்தில், தியாகராசர் இயற்றிய ஆதி தாளத்தில் அமைந்த 'இந்த சவுக்கிய' கீர்த்தனையை, இருவரும் பாடினர்.

நிறைவாக 'நிஸரி பநிஸரி மபநிஸரி' என அமைந்த கோர்வை, அனைவரையும் கவர்ந்தது. சங்கீத உலகத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் மிருதங்கம் வாகீஷ் நந்துாரி, கஞ்சிரா முரளி வரதராஜன் ஆகியோரின் வாசிப்பு பிரமாதம்.

-சத்திரமனை ந.சரண்குமார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us