/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பு திரும்ப வழங்க உத்தரவு கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பு திரும்ப வழங்க உத்தரவு
கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பு திரும்ப வழங்க உத்தரவு
கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பு திரும்ப வழங்க உத்தரவு
கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பு திரும்ப வழங்க உத்தரவு
ADDED : மார் 23, 2025 12:35 AM
சென்னை, சென்னை திருமங்கலத்தை சேர்ந்த ருக்மணி என்பவரிடம், 2023ல் கூடுதலாக வசூலிக்கப்பட்ட, 30,000 ரூபாயை திரும்ப வழங்க மின் வாரியத்திற்கு, மின் குறைதீர்ப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தன் வீட்டில் குறைவாக மின்சாரம் பயன்படுத்துவதாகவும், ஆனால் அதிக மின் கட்டணம் வருவதாகவும், 2023 மார்ச்சில், திருமங்கலம் மின் வாரிய அலுவலகத்தில், ருக்மணி புகார் அளித்துள்ளார். அவரின் மீட்டரை எடுத்து, எம்.ஆர்.டி., ஆய்வகத்தில் பொறியாளர் சோதனைக்கு அனுப்பினார். மீட்டர் நல்ல நிலையில் இருப்பதாக முடிவு வந்தது.
இந்த தகவல் நுகர்வோரிடம் தெரிவிக்கப்பட்டது. அதை நம்பி, தன் வீட்டில் மின் சாதன பழுது இருக்கிறதா என, எலக்ட்ரிக் வேலைகளை ருக்மணி செய்துள்ளார். பின், கூடுதல் மின் சாதனங்களை பயன்படுத்தாத நிலையிலும், மீண்டும் அதிக மின் கட்டணம் வந்துள்ளது.
இதுகுறித்து புகார் அளித்தார். மீண்டும் மீட்டர் ஆய்வகத்தில் இரண்டாவது முறை சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதிலும், மீட்டர் நன்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பின், மின் வாரியத்திற்கு சவால் விடுக்கும் வகையில், சென்னை கிண்டியில் உள்ள மூன்றாம் நபர் ஆய்வகத்தில் மீட்டர் சோதிக்க நுகர்வோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு, 5,000 ரூபாய் சவால் கட்டணம் செலுத்தினார்.
அந்த ஆய்வகத்தில், மீட்டரில் ஒரு யூனிட் பயன்படுத்தினால், இரு யுனிட் பதிவு ஆவது, 2024 ஜுலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மீட்டரில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே, தான் செலுத்திய கூடுதல் மின் கட்டணத்தை திரும்ப வழங்க கோரி, குறைதீர் மன்றத்தில் மனு செய்துள்ளார். அங்கு, இரண்டாவது முறை புகார் தெரிவித்த காலத்தில் இருந்து வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை திருப்பி தருமாறு உத்தரவிடப்பட்டது.
இதை ஏற்காத நுகர்வோர், முதல்முறையாக புகார் அளித்த காலத்தில் இருந்து கூடுதலாக வசூலித்த கட்டணத்தை தருமாறு, ஒழுங்குமுறை ஆணையத்தில் உள்ள குறைதீர்ப்பாளரிடம் மேல்முறையீடு செய்தார்.
இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த குறைதீர்ப்பாளர், இரண்டு மடங்கு வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனால், சவால் கட்டணம், 5,000 ரூபாய் உட்பட, 30,000 ரூபாய் நுகர்வோருக்கு திருப்பி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
*