/உள்ளூர் செய்திகள்/சென்னை/சாலை ஒட்டு பணிகளை பிப்., 29க்குள் முடிக்க... உத்தரவு! தேர்தல் நெருங்குவதால் மாநகராட்சி 'சுறுசுறு'சாலை ஒட்டு பணிகளை பிப்., 29க்குள் முடிக்க... உத்தரவு! தேர்தல் நெருங்குவதால் மாநகராட்சி 'சுறுசுறு'
சாலை ஒட்டு பணிகளை பிப்., 29க்குள் முடிக்க... உத்தரவு! தேர்தல் நெருங்குவதால் மாநகராட்சி 'சுறுசுறு'
சாலை ஒட்டு பணிகளை பிப்., 29க்குள் முடிக்க... உத்தரவு! தேர்தல் நெருங்குவதால் மாநகராட்சி 'சுறுசுறு'
சாலை ஒட்டு பணிகளை பிப்., 29க்குள் முடிக்க... உத்தரவு! தேர்தல் நெருங்குவதால் மாநகராட்சி 'சுறுசுறு'
ADDED : பிப் 23, 2024 11:35 PM

லோக்சபா தேர்தலுக்கு முன், சென்னை முழுதும் மிகவும் மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்கும்படி, மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. வரும் 29ம் தேதிக்குள் அப்பணிகளை முடித்து, மாநகராட்சிக்கு அறிக்கை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில், பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.
அதன்படி, மாநகராட்சி சாலைகளை தோண்டி மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் சுரங்கப்பாதை, மின் வாரியம் வாயிலாக கேபிள் புதைப்பு, மெட்ரோ குடிநீர் வாரியம் வாயிலாக குழாய் பதிப்பு, மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் உட்பட பல பணிகள் நடந்து வருகின்றன.
அத்துடன், மழை காரணமாகவும், சென்னையில் ஏராளமான சாலைகள் சேதமடைந்துள்ளன.
மழைக்காலத்தின் போது, சேதமடைந்த சாலைகளில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மழை முடிந்த பின்னும், பல இடங்களில் பல்லாங்குழி போல் காட்சியளித்த சாலைகளால், அரசு மற்றும் மாநகராட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.
பேருந்து மற்றும் உட்புற சாலைகள், குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதும், கை, கால் எலும்பு முறிவு பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் தொடர்ந்தது.
இந்நிலையில், சென்னையில் பல்லாங்குழி போல் உள்ள சாலைகளை முழுதும் சீரமைக்கவும், 'பேட்ஜ்வொர்க்' என்ற தற்காலிக அடிப்படையில் சீரமைக்கும் பணியையும், ஜன., மாதம் முதல் மாநகராட்சி தீவிரப்படுத்தியது.
அதன்படி சென்னையில், 3,143 சாலைகளில், குண்டும், குழியுமான இருந்த 9,880 இடங்களில் பேட்ஜ்வொர்க் செய்யும் பணியை, மாநகராட்சி தீவிரப்படுத்தியது. இதில், 9,115 பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 765 பணிகள் நடந்து வருகின்றன.
மண்டல அளவில் நடக்கும் பணிகளை தீவிரப்படுத்தவும், தினமும் 100 பள்ளங்களை சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், 2022 - 23ம் நிதியாண்டில், 518 கோடி ரூபாய் மதிப்பில், 4,616 சாலைகளில் 778 கி.மீ., நீளத்திற்கு சீரமைக்கும் பணி துவங்கப்பட்டது. இவற்றில், 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்துள்ளன.
அதேநேரம், 2023 - 24ம் நிதியாண்டில், 712 கோடி ரூபாய் மதிப்பில், 6,632 சாலைகளில், 1,028 கி.மீ., சாலைகள் சீரமைக்கும் பணி துவங்கப்பட்டு, 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்துள்ளன.
இதற்கிடையே, லோக்சபா தேர்தல் அறிவிப்பு, மார்ச் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
அதற்குள், சென்னையின் மிகவும் மோசமான நிலையில் உள்ள, பிரதான மற்றும் உட்புற சாலைகளை சீரமைக்க வேண்டும் என, அனைத்து மண்டலங்களுக்கும், மாநகராட்சி கெடு விதித்துள்ளது.
இம்மாதம் 29ம் தேதிக்குள் சாலை ஒட்டு பணிகளை முடித்து, அதுகுறித்த விபரங்களை, ரிப்பன் மாளிகையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரி ராஜேந்திரன் கூறியதாவது:
சேதமடைந்த சாலைகளில், பேட்ஜ்வொர்க் பணிகள் 90 சதவீதத்திற்கு மேல் முடிக்கப்பட்டு உள்ளன.
ஓரிரு வாரங்களில், அனைத்து சாலை ஒட்டு பணிகள் முடிக்கப்படும். அதேநேரம், சாலை சீரமைப்பு பணிகளுக்கு, பல்வேறு கட்டங்களாக 'டெண்டர்' அளிக்கப்பட்டு உள்ளது.
அச்சாலைகள், மழைக்கு முன்னதாக போட்டு முடிக்கப்படும். புதிய ஒப்பந்தம் விடப்படாது என்றாலும், ஏற்கனவே விடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, தொடர்ந்து சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறும்.
முறையாக சாலை பணிகள் மேற்கொள்ளாத இடங்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அரசு அறிவுறுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -