
ஓர்மைகள் மறக்குமோ
ஆசிரியர்: அரசு அமல்ராஜ்
வெளியீடு: காலச்சுவடு
பக்கம்: 239, விலை: ரூ.290
மேற்கு தொடர்ச்சி மலையின் மாஞ்சோலையை புவியியல், நிலவியல், சூழலியல் ரீதியில் ஆராயும் நுால். சோலைக்காடு வளமானதையும், அங்குள்ள மக்களின் பண்பாடு, கலாசாரம் பற்றியும் அலசுகிறது. அந்நிலத்தின் மாறி மாறி அமைந்துள்ள அதிகாரம் பற்றியும் பேசுகிறது.
உயிரைக் காத்த நாகம்
ஆசிரியர்: கே.பி.அறிவானந்தம்
வெளியீடு: சத்யா என்டர்பிரைசஸ்
பக்கம்: 122, விலை: ரூ.160
ஒரு அமானுஷ்ய திரைப்படத்துக்கான கதையை நாவலாக்கியது போன்ற கதை. ஒருவனுக்கு நாக தோஷம். அவனைக்கொல்ல விதிக்கப்பட்ட நாகத்துக்கு பால் வார்க்கும் கோகிலாவின் காதலனே அவன். பாசம், காதல், மர்மம் என மாறி மாறி விறுவிறுப்பாக பயணிக்கிறது நாவல்.
டிங்கிள் கோல்டு -கலக்டர்ஸ் எடிஷன் 3 (ஆங்கிலம்)
ஆசிரியர்: அபர்னா சுந்தரேசன்
வெளியீடு: அமர் சித்ரா கதா பி.லிட்
பக்கம்: 194, விலை: ரூ. 449
வண்ணப்படங்களுடன் பள்ளி குழந்தைகள் விரும்பிப் படிக்கும் சாகசக் கதைகள் நிறைந்த 'டிங்கிள் கோல்ட் - கலெக்டர்ஸ்' எடிஷனின் மூன்றாவது புத்தகம். சுப்பாண்டி, ஸ்ரீஹரி ஷாம்புவுடன் துப்பறியும் ராகுல், ரவியும் சேர்ந்து செய்யும் சாகசங்கள் நிறைந்தது. ராஜிப் தாஸின் ஓவியங்கள் மிளிர்கின்றன.
தீட்டுப்பறவை
ஆசிரியர்: கிரேஸ் பானு
வெளியீடு: திருநங்கை பிரஸ்
பக்கம்: 116, விலை: ரூ. 150
அமெரிக்க பயணத்தை விவரிக்கிறது. இதில், திருநங்கையாக தன்னை அடையாளம் கண்டது முதல், அடையாளப்படுத்தியது வரையிலான தகவல்கள் மீள் நினைவுகளாகவும், வெளிநாடுகளில் உள்ள திருநங்கைகளின் நிலை, சட்டம், அணுகுமுறை பற்றியும் விவரிக்கிறது.
என்பா என்பாதான்
ஆசிரியர்: அழகிய சிங்கர்
வெளியீடு: விருட்சம்
பக்கம்: 70, விலை: ரூ. 70
'யாருடனும் நான் பேசப் போவதில்லை - எனக்குப் பதில் பணம் பேசுகிறது - கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருக்கிறேன் - சொல்ல என்ன இருக்கிறது' என்ற வகையில், நுால் நெடுக, அழகியசிங்கரின் புதுவ வடிவ புதுக்கவிதைகள் விரவிக்கிடக்கின.
வான் உயர்ந்த ஆதுர சாலை
ஆசிரியர்: ராசி அழகப்பன்
வெளியீடு: காக்கைக்கூடு
பக்கம்: 136, விலை: 150
நாவல், வேம்பு, பனை, புங்கன், கொடுக்காப்புளி, புளி, பூவரசு என, 17 மரங்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். இதில், மரங்களின் தாவரவியல் பெயர், பாகங்கள், சித்த மருத்துவ குணங்கள் மற்றும் மரம் சார்ந்த கிராமத்து வாழ்வியல் என கலந்து கட்டப்பட்ட கதம்பம் இது.